Published : 20 Aug 2024 01:49 PM
Last Updated : 20 Aug 2024 01:49 PM

“கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டு மதிப்பை உயர்த்தியது மக்களை வஞ்சிக்கும் செயல்” - ஓபிஎஸ்

சென்னை: “ஏற்கெனவே பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வினால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்ந்துவிட்டது, கட்டுமானத் தொழில் முடங்கும் நிலைக்கு வந்துவிட்டது, இந்தத் தொழிலில் உள்ள சிக்கல்களை தீர்க்கப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக கடந்த மூன்றாண்டுகளில் கட்டுமானத் தொழிலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்தியது, இந்த உயர்வுக்கு நீதிமன்றம் தடை விதித்தும் அதனை நடைமுறைப்படுத்தாதது, பேசிக், பிரீமியம், அல்ட்ரா பிரீமியம் என மூன்று வகைகளாக பிரித்து வழிகாட்டி மதிப்பினை நிர்ணயம் செய்தது, பின்னர் தெரு வாரியாக மதிப்பீடுகளை நிர்ணயம் செய்தது, அடுக்குமாடி கட்டங்களில் பிரிபடா பாகத்திற்கு தனி பதிவு முறை, கட்டிடங்களுக்கு தனி பதிவு முறை என்றிருந்ததை ஒரே பதிவாக மாற்றி கூட்டுப் பதிவுக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது என பல்வேறு கூடுதல் நிதிச் சுமைகள் மக்கள் மீது திணிக்கப்பட்டன. இதன் விளைவாக, 1000 சதுர அடிக்கு 5 இலட்சம் ரூபாய் என்றிருந்த பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் தற்போது இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், கட்டடங்களுக்கான புதிய வழிகாட்டு மதிப்பீடுகளை பதிவுத் துறை தற்போது உயர்த்தியுள்ளது. இதன்படி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், 10.7 சதுர அடிக்கு சராசரியாக 11,000 ரூபாய் என்றும், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 10.7 சதுர அடிக்கு சராசரியாக 12,000 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும். இது தளத்திற்கேற்ப மாறுபடும் என்றும், இதேபோன்று, கட்டுமானப் பொருட்களின் அடிப்படையில், பல்வேறு மதிப்புகள் கட்டடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் இந்த கட்டடங்களுக்கான வழிகாட்டி மதிப்பின் மூலம் 15 விழுக்காடு பதிவு மற்றும் முத்திரைத் தாள் கட்டணம் உயரக்கூடும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வினால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக, பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்திற்கென்று தனியாக கடன் வாங்கி தவணை செலுத்தும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கட்டடங்களுக்கான புதிய வழிகாட்டி முறையினை ரத்து செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x