Last Updated : 20 Aug, 2024 12:50 PM

 

Published : 20 Aug 2024 12:50 PM
Last Updated : 20 Aug 2024 12:50 PM

முதல்வரின் முதல் நிலை செயலராக உமாநாத் நியமனம் - யாருக்கு எந்தெந்த துறைகள்?

உமாநாத் ஐஏஎஸ்

சென்னை: முதல்வரின் முதல் நிலை செயலராக இருந்த நா.முருகானந்தம் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட நிலையில், அப்பொறுப்புக்கு பி.உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தின் 50-வது தலைமைச் செயலராக, முதல்வரின் முதல் நிலை செயலராக இருந்த நா.முருகானந்தம் நியமிகக்கப்பட்டு, அவர் பொறுப்பேற்றார். இந்நிலையில், முதல்வரின் செயலர்கள் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில், ‘முதல்வரின் முதல் நிலை செயலராக பி.உமாநாத், 2-ம் நிலை செயலராக எம்.எஸ்.சண்முகம், 3-ம் நிலை செயலராக அனுஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, முதல்வரின் முதல் நிலை செயலராக நா.முருகானந்தம் இருந்தபோது, அடுத்தடுத்த நிலைகளில் பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனுஜார்ஜ் ஆகியோர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு எந்தெந்த துறைகள்? - முதல்வரின் செயலராக நியமிக்கப்படுபவர்களுக்கு குறிப்பிட்ட துறைகள் சார்ந்த பணிகளை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில் முதல் நிலை செயலர் பி.உமாநாத், வணிகவரி, பதிவுத்துறை, எரிசக்தி, நிதி, உள்துறையின் கீழ் வரும் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை , நெடுஞ்சாலை, தொழில், நகராட்சி நிர்வாகம், இயற்கை வளங்கள், பொதுத்துறை, பொதுப்பணி, கண்காணிப்பு ஆணையம், நீர்வளம் ஆகிய 13 துறைகளை கவனிப்பார்.

இரண்டாம் நிலை செயலர் எம்.எஸ்.சண்முகம், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உணவு, முதல்வர் அலுவலகம் மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகம், உயர்கல்வி, வீட்டுவசதி, மனிதவள மேலாண்மை, சட்டம், சட்டப்பேரவை, வருவாய், ஊரகவளர்ச்சி, தமி்ழ் வளர்ச்சி, அறநிலையத் துறை என 12 துறைகளை கவனிப்பார்.

மூன்றாம் நிலை செயலர் அனுஜார்ஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடினர் நலன், கால்நடைபராமரிப்பு, பால் மற்றும் மீன்வளம், பிசி,எம்பிசி மற்றும் சிறுபான்மையினர் நலன், அரசியல் சாராத முதல்வரின் சந்திப்பு அனுமதி மற்றும் பயண ஏற்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், சுகாதாரம், குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறை, பள்ளிக்கல்வி, சமூக நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைகளை கவனிப்பார்.

முதல்வரின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.லட்சுமிபதி, கைத்தறி மற்றும் துணிநூல்துறை, தகவல் தொழில்நுட்பம், தொழிலாளர் நலன், திட்டம் மற்றும் வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, சமூக சீர்திருத்தம், சுற்றுலா மற்றும் கலாசாரம், போக்குவரத்து ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x