Published : 20 Aug 2024 08:05 AM
Last Updated : 20 Aug 2024 08:05 AM

‘இந்து தமிழ் திசை’ சிறந்த மருத்துவர்களை அடையாளம் கண்டு கவுரவிப்பது மகிழ்ச்சிக்குரியது: ‘மருத்துவ நட்சத்திரம்' விருது விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2024’ விருதுகள் வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, ‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம் நினைவு பரிசு வழங்கினார். உடன் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன், செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, பொருளாளர் எஸ்.கவுரி சங்கர். | படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும், அர்ப்பணிப்போடும் செய்துவரும் மருத்துவர்களைப் பாராட்டி, கவுரவிக்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், நான்காவது ஆண்டாக ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2024’ விருதுகள் வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு (ஐஎம்ஏ), ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இணைந்து நடத்தின.

விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், அரியலூர், தருமபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களைச் சேர்ந்த 70 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கி கவுரவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம் அமைச்சருக்கு புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி பேசினார். தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் மருத்துவர் கே.எம்.அபுல்ஹசன், மதிப்புறு மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, மதிப்புறு நிதிச் செயலாளர் எஸ்.கவுரி சங்கர், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவன மேலாளர் மதனமோகன், ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் டோடோனோவ், இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை செயலாளர் பி.தங்கப்பன் ஆகியோருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடிய பெரம்பூர் மாநகராட்சி் பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசு வழங்கினார். விழாவில் 'இந்து தமிழ் திசை'யின் சுத்தம், சுகாதாரம் விழிப்புணர்வு தொடர் குறித்த 3 நிமிட குறும்படம் திரையிடப்பட்டது.விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் தொடர்ந்து 4-வது ஆண்டாக கலந்து கொண்டு விருதுகளை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். பொதுவாக, விருதுகள் வழங்குவது என்பது, விருதுகளை பெறுபவர்கள் இன்னமும் கூடுதலாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றன.

உலக புகழ் பெறும் மருத்துவர்கள்: மிகப்பெரிய அளவில் பாரம்பரியம் கொண்ட முன்னணி நாளிதழ், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பிப்பது மிகச்சிறப்பான ஒன்று. தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் உலக புகழ்பெற்ற மருத்துவர்களாக விளங்கி கொண்டிருக்கிறார்கள். பல்வேறு வகையிலான சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு மருத்துவத் துறையில் சாதனை படைத்திருக்கிறார்கள். இவர்களை கவுரவிப்பது அரசின் கடமை மட்டுமல்ல. எங்களின் கடமையும்தான் என்று கூறி, இந்து தமிழ் திசை இந்த அளவு பணியைமுன்னெடுத்து உள்ளது என்பது உண்மையில் பாராட்டுக்குரியது. வணங்கக்கூடியது.

தமிழக அரசு சார்பில், கடந்த 6 ஆண்டுகளாக இதுபோன்ற விருதுகள் தரப்படாமல் இருந்தது. இந்திய மருத்துவச் சங்கத்தினர் கடந்த ஆண்டு என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, 2021-க்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேர் உட்பட 105 பேருக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி மருத்துவர் தினத்தன்று விருதுகள் வழங்கப்பட்டன. வரும் ஆண்டுகளில் 50 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு அரசு மருத்துமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து, மருத்துவ சேவையில் உலக அளவில் தமிழகம் புகழ் கொடி நாட்டி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் தொடங்கப்பட்டு, மக்களை வீடுகளுக்கே தேடிச்சென்று நீரழிவு, உயர் அழுத்தம் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் தற்போதுவரை 1 கோடியே 88 லட்சத்து 6,508 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டம் உலக அளவில் புகழ்பெற்ற திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

திட்ட தொகை உயர்வு: இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் உலகில் எங்கும் இல்லாத அற்புதமான திட்டங்கள் ஆகும். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 76,847 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்காக அரசு ரூ.241.68 கோடி செலவிட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இத்திட்ட தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில், சிறந்த மருத்துவர்களை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் விருது வழங்கி வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். அந்தவகையில் இந்த ஆண்டு விருது பெறக்கூடிய 210 பேருக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.

வேலைவாய்ப்பை உயர்த்த வேண்டும்: இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் கே.எம்.அபுல்ஹசன் பேசியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் விருதுகளை வழங்கி வருவதற்கு, எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவத்துறையில் தமிழகம் ஓங்கி வளர்ந்துள்ளது. நவீன மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் முதன்முதலில் இந்தியாவில் தமிழகத்தில்தான் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மருத்துவ சங்கத்தில் உள்ள 42 ஆயிரம் மருத்துவர்கள், தமிழகத்திலுள்ள 8 கோடி மக்களுக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சியை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மருத்துவம் படிக்கும் மாணவர்களை நாம் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அதற்காக மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அரசு அதிகரிக்க வேண்டும்.

விழாவில் பங்கேற்றவர்கள்.

கிராமங்களிலும் மருத்துவமனை: இந்திய மருத்துவ சங்கத்தின் மதிப்புறு மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு பேசியதாவது: தமிழகத்தில் 50-க்கும் குறைவான படுக்கைகளை கொண்ட 7,500 தனியார் மருத்துவமனைகளும், 50-க்கும் அதிகமான படுக்கைகளை கொண்ட 700 மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. இவைதவிர 28 ஆயிரம் தனியார்புறநோயாளிகள் மையங்கள் உள்ளன.

மேலும் அரசு சார்பிலும் நிறைய மருத்துவமனைகள், மையங்கள் செயல்படுகின்றன. தமிழக மருத்துவத் துறை முன்னேற காரணம், அரசின் மூலம் கிடைக்கும் தரமான வசதிகளும் இணைந்து பணியாற்றும் தனியார் அமைப்புகளும்தான்.

இதன்மூலம் அனைத்து கிராமங்களிலும் மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்து இடங்களிலும் பணியாற்றும் மருத்துவர்களை கவுரவிக்கும் முயற்சிக்கு நன்றி. இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x