Published : 19 Aug 2024 08:59 PM
Last Updated : 19 Aug 2024 08:59 PM
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜகவினர் பங்கேற்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதிமுக சார்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வையொட்டி, முதல்வர் ஸ்டாலின், ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
அரசியல் ‘சலசலப்பு’ - நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், பட்ஜெட் நிதி ஒதுக்கீடு என மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கே நிலவி வந்தது. இந்நிலையில், கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன.
திமுக கூட்டணிக் கட்சிகள்: இந்த தேநீர் விருந்தில், தமிழக முதல்வர் மற்றும் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில், திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையில் இருந்து யாரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால், வாழ்த்துகள் மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை? - இந்நிலையில், கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்க வேண்டுமென்றால், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்து முதல்வர் பங்கேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே முதல்வர் தேநீர் விருந்தில் பங்கேற்றதற்கான காரணம். இதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. தமிழ், தமிழ் என்று முரசு கொட்டும் திமுக 100 ரூபாய் நாணயத்தில் இந்தி மொழி பொறித்திருப்பதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? திமுகவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை இந்த விழாவுக்கு ஏன் திமுக அழைக்கவில்லை? திமுகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள், தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுகவுடன் இணைந்துவிட்டது,” என்று கூறியிருந்தார்.
மத்திய அரசின் நிகழ்ச்சி - மு.க.ஸ்டாலின் பதில்: திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கரின் இல்லத் திருமண விழாவில் திங்கட்கிழமை கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “ராஜ்நாத்சிங் கலைஞரை பற்றி பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கலைஞர் நாணயம் வெளியிடுகிறார்கள். அதில் இந்தி இடம் பெற்றுள்ளது. `தமிழ், தமிழ்’ என திமுகவினர் முழங்குகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டு நடப்பு பற்றி புரிந்திருக்க வேண்டும் அல்லது மூளையாவது இருக்க வேண்டும். மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்ததால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல. இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று பேசினார்.
பாஜகவுடன் கள்ள உறவு - இபிஎஸ் பதிலடி: முதல்வரின் இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே திமுகவின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2004 முதல் 2013 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி சுகத்தை அனுபவித்தவர்கள் திமுகவினர். தமிழகத்தில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் கட்சியின் தயவால் திமுக ஆட்சி நடத்தியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தற்போது மறந்தவர் ஸ்டாலின் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதல்வர் சொன்னபோது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை திமுக முதல்வருக்கு மூளை இருக்கிறதா என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நிதி கொடுக்க மறுப்பது ஏன்? - இதனிடையே, திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாணயத்தை வெளியிட உடனடியாக ஒத்துக்கொண்ட மத்திய அரசு, தமிழக அரசு கேட்கும் நிதியை, கொடுக்க மறுக்கிறது. மத்திய அரசை பொறுத்தவரை, தமிழக அரசையும், தமிழக மக்களையும் புறந்தள்ளுகிற போக்கில் எந்த மாற்றமும் இல்லை. அதனால், பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது. பாஜகவை எதிர்ப்பது என்கிற ஒரு விஷயத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத, மதவெறி அரசியலை எதிர்கின்ற அடிப்படையில், தற்போது இந்தக் கூட்டணியில் இருக்கின்றோம். திமுக அரசு செய்யக்கூடிய நல்ல விஷயங்களை ஆதரிக்கின்றோம். மக்கள் விரோத போக்கை கடுமையாக எதிர்க்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.
மதவாத சக்திகளுடன் சமரசமில்லை... - சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, “திமுக தலைவர் ஸ்டாலின் மதவாத சக்திகளுடன் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். காமராஜருக்குப் பின்னர் தமிழகத்தில் பல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியவர் கருணாநிதி. தமிழக மக்களுக்காக உண்மையாக உழைத்தவர். அவரை யார் வாழ்த்தினாலும் மகிழ்ச்சியடைவோம்.
உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை அதிமுக அனுமதித்தது. தமிழகத்தின் நலனை விட்டுக் கொடுத்து, பின்னுக்குத் தள்ளி மத்திய அரசின் எந்த திட்டங்களையும் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திடவில்லை. கருணாநிதியை இதற்கு முன்பு காழ்ப்புணர்ச்சியுடன் பேசியவர்கள் இன்று மேடை ஏறி அவரை வாழ்த்துகிறார்கள் என்றால் மகிழ்ச்சி தான். ஆனால், தேர்தல் பரப்புரையில் திமுகவையும், கருணாநிதியையும் வசைபாடியதை பாஜக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பாஜகவின் வாழ்நாள் அடிமை: மதுரை அருகே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “இதுவரை பாஜக எதிர்ப்பாளராக தன்னை காட்டிக் கொண்ட திமுகவும், அதன் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. என் அப்பாவுக்கு நாணயத்தை வெளியிட மத்திய அரசையும், அதன் அமைச்சர்களையும், பாஜகவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கிறார். ஆனால், இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காதபோது இப்படி அவரை மத்திய அரசை வலியுறுத்த வில்லை. கீழே இறங்கி சென்று உதவி கேட்கவில்லை.
ஆனால், அப்பாவின் நாணயம் வெளியிடும் விழாவுக்கு கீழே இறங்கி சென்று பாஜகவினர் அனைவரையும் வரவேற்கிறார். கேட்டால், திமுகவினர், மாற்று கட்சியினருக்கு, மாற்று கொள்கை கொண்டவர்களுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் என்று காரணம் கூறுகிறார். அப்படியென்றால், நிதி ஆயோக் கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தை பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது,” என்று பேசியுள்ளார்.
காக்கி பேன்ட் ஏன் அணிய வேண்டும்? - இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவதே பாஜக தான் எனும்போது அவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பாஜகவுக்கும் திமுகவுக்கு எந்தவிதமான கொள்கை மாறுபாடும் கிடையாது. தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக, எதிர்ப்பது போன்று எதிர்ப்பார்கள். விளையாட்டுப் போட்டியை பிரதமரை அழைத்து வந்து நடத்துவார்கள். நலத்திட்ட உதவிகளை பிரதமரை அழைத்து வந்து நடத்துவார்கள்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ‘Go Back Modi’ என்றுகூறி கருப்புக் கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். ஆளுங்கட்சியான பிறகு, ‘Welcome Modi’, வெள்ளைக் கொடியுடன், வெள்ளைக் குடை பிடிக்கின்றனர். காவலர்களுக்கு காக்கிக்குப் பதிலாக காவிச் சீருடை கொடுக்கின்றனர். நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் காக்கி பேன்ட் அணிந்திருந்தார்? முதல்வர் ஏன் அந்த காக்கி பேன்ட்டை அணிய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT