Published : 19 Aug 2024 07:21 PM
Last Updated : 19 Aug 2024 07:21 PM

“மத்தியில் பதவி சுகத்துக்காக கூட்டணி துரோகம் செய்வதே திமுகவின் வாடிக்கை” - ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதல்வர் சொன்னபோது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை திமுக முதல்வருக்கு மூளை இருக்கிறதா என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்,” என்று பாஜக உறவு குறித்த தமிழக முதல்வரின் பேச்சுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா என்று நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கூறியிருக்கிறார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்பதோடு, அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார்.

‘Go Back Modi’ என்றும், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மேடைக்கு மேடை பேசினாரோ, அந்த பொம்மை முதல்வர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சியைக் காப்பாற்ற பாஜகவின் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்து விழாவை நடத்தியுள்ளார். இது குறித்தும், காங்கிரஸ் தலைவர்களை ஏன் அழைக்கவில்லை என்றும் நான் கேட்டதற்கு ஸ்டாலின் ஏன் இவ்வளவு எரிச்சல்பட வேண்டும்?

ஸ்டாலின் இன்று (ஆக.19) திருமண விழாவில் பேசும்போது, கருணாநிதி நாணய வெளியீட்டு விழா, திமுக நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசின் நிகழ்ச்சி என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்க அவசியமில்லை என்றும், பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் பயத்தில் உளறியிருக்கிறார். எங்களைப் பார்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கலைவாணர் அரங்கில் ரூ.100 நாணயம் வெளியிட்ட நிகழ்ச்சி தமிழக அரசு நடத்திய அரசு விழா. அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், அழைப்பிதழ் கலைஞர் 100 என்று இலச்சினையுடன், தமிழக அரசு இலட்சினைதான் இடம் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக, அழைப்பிதழில் அனைவரையும் அழைத்தவர் தமிழக அரசு தலைமைச் செயலாளர். எனவே, ராகுல் காந்தி அல்லது அவரது தாயார் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைக் கூட இந்நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மேடையில் இடம் இல்லை.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு சிறிதும் தகுதி இல்லாத ஒருவர் உள்ளார் எனில் அது ஸ்டாலின்தான்.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஓலமிட்ட கதையாக உள்ளது இவரது வெற்றுப் பேச்சு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாகவும், கடற்கரையில் அழகிய நினைவிடமும் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவாக மவுன அஞ்சலி செலுத்தி வருகிறோம். மறைந்த எங்களது இருபெரும் தெய்வங்களை, எங்களது ஒவ்வொரு செய்கையிலும் நாங்கள் நினைவில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஆட்சியில் சென்னை உயர் கல்வித் துறை வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை நிறுவினோம். ஆண்டுதோறும் அவரது உருவச் சிலைக்கு மரியாதை செய்திட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டோம். கடற்கரைச் சாலையில் இருந்து அவரது சிலைக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிலையைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைந்தவுடன், அண்ணா மற்றும் எம்ஜிஆர். ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகாமையில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய கோடிக்கணக்கான தொண்டர்களாகிய நாங்கள் முனைந்தபோது, கடற்கரையில் நினைவிடம் அமைக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க விஞ்ஞான ரீதியில் சிலரைத் தூண்டிவிட்டது யார்? பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக, இதற்கு பதில் கருணாநிதி மறைந்தவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. கருணாநிதி மறைந்த அன்று இரவோடு இரவாக, கலைஞர் நினைவிட வழக்கு விசாரிக்கப்பட்டபோது, ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்துப் போட்ட வழக்குகள் இரவோடு இரவாக வாபஸ் வாங்கப்பட்டது.

மேலும், காமராஜர் மறைந்தபோது, கடற்கரையில் நினைவிடம் கட்ட கோரிக்கை எழுந்தபோது, ‘முன்னாள் முதல்வர்களுக்கெல்லாம் கடற்கரையில் நினைவிடம் கிடையாது’ என்று கோப்புகளில் எழுதி கையெழுத்திட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு, நாங்கள் அதே வசனத்தைத் திருப்பிப்போட்டு, இரவோடு இரவாக கருணாநிதி நினைவிடத்துக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க முடியும். ஆனால், நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழி வந்தவர்கள். உங்களைப் போல் உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்று வேஷம் போடுபவர்கள் அல்ல என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

பொம்மை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும், இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்துக்கும், திராவிட மாடல் ஆட்சி என்று வசனம் பேசி, தமிழக மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் திராவக மாடல் ஆட்சிக்கும், இப்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஊறுகாயாக தேவைப்பட்டன. தொட்டுப்பார், கட்டிப்பார், வெட்டிப்பார், இந்தி தெரியாது போடா என்றெல்லாம் மத்திய அரசைப் பார்த்து வறட்டு சவால்களை தானும் விட்டு, கூட்டணிக் கட்சியினரையும் விட்டு வசைபாடச் செய்தார். அந்நாடகத்தை தொடர்ந்து நடத்தினார். இனி கூட்டணிக் கட்சியினரின் தயவு தேவையில்லை, குடும்ப நலன் முக்கியம் என்றவுடன் தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான நிதியைப் பெற வக்கில்லாமல், தன் அப்பாவின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்து, நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதை நாகரிகமாக சுட்டிக்காட்டிய என் மீது பாய்ந்து குதறியிருக்கிறார்.

சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும்; புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில அமைச்சர்களைக் காப்பாற்றவும் ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் அதிமுகவுக்கு எந்தக் கவலையும் இல்லை. தன்னுடைய கபட நாடகம் என் மூலம் வெளிப்பட்டுவிட்டதே என்ற கோபத்தில் வானத்துக்கும், பூமிக்கும் தாவி குதித்திருக்கிறார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அரசில் உள்ளவர்களை நான் அழைத்ததாகவும், ஆனால், மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்றும் தார்பாயில் வடிகட்டிய பொய் மூட்டை ஒன்றை ‘நா-நயம் மிக்கவரின் மகன்’ அவிழ்த்து விட்டிருக்கிறார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி எனது தலைமையிலான அதிமுக அரசில், மாவட்டந்தோறும் கோடிக்காணக்கான ரூபாய் மதிப்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினோம். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என பெயரைச் சூட்டினோம். மேலும், அவரது நினைவாக ரூ.100 நாணயம் வெளியிட்டோம். எங்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாணயம் வெளியிட்டது, விழாவை நாங்களே நடத்தினோம். என் தலைமையிலான தமிழக அரசு நடத்தியது.

மத்தியில் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே திமுகவின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2004 முதல் 2013 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி சுகத்தை அனுபவித்தவர்கள் திமுகவினர். தமிழகத்தில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் கட்சியின் தயவால் திமுக ஆட்சி நடத்தியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தற்போது மறந்தவர் ஸ்டாலின் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதல்வர் சொன்னபோது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை திமுக முதல்வருக்கு மூளை இருக்கிறதா என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்,” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x