Published : 19 Aug 2024 04:47 PM
Last Updated : 19 Aug 2024 04:47 PM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆந்திராவில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை சென்னை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த (தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்) வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32) கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக இருந்த அவரது தந்தை, பிரபல ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.
இதையடுத்து, கொலை வழக்கில் மேலும், துப்பு துலக்கும் வகையில் அஸ்வத்தாமன், அவரது தந்தை நாகேந்திரன் இருவரையும், தங்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். தனித்தனியாகவும், ஒன்றாக சேர்த்து வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை போலீஸார் தேடி வந்தனர்.
அவர் தலைமறைவானதையடுத்து, தனிப்படை அமைத்து போலீஸார் தேடினர். இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீஸார் இன்று (ஆக.19) கைது செய்தனர். பின்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அடுத்த மாதம் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பொற்கொடி சிறையில் அடைக்கப்பட்டார்.ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு கோடிக் கணக்கில் பணம் கைமாறியது.
அந்த வகையில் பொற்கொடி, தனது கணவர் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலுவுக்கு முதல் தவணையாக ரூ.1.5 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலைக்கு மறைமுக உதவிகளையும் பொற்கொடி செய்ததாக போலீஸார் குற்றம் சாட்டினர். இதுஒருபுறம் இருக்க தலைமறைவாக உள்ள பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இவர்கள் பிடிபடும் பட்சத்தில் கொலை திட்டத்தின் முழு விபரமும் வெளியாகும் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT