Published : 19 Aug 2024 02:51 PM
Last Updated : 19 Aug 2024 02:51 PM
புதுச்சேரி: கொல்கத்தா சம்பவத்தால் ஜிப்மரில் தொடரும் காலவரையற்ற போராட்டத்தால் வெளிப்புற சிகிச்சை நேரம் ஜிப்மரில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வெளியூர் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் 4-ம் நாளாக இன்றும் (ஆக.19) ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிப்புற சிகிச்சை பிரிவு நேரம் இன்று காலை 8 முதல் 10 மணி வரை மட்டுமே இருக்கும் என்று ஜிப்மர் அறிவித்துள்ளது. அத்துடன் தொடர் போராட்டத்தில் டாக்டர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். நடத்தை விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை வெளிப்புற சிகிச்சைக்கு விழுப்புரம், நெய்வேலி, கடலூர், தஞ்சாவூர். திண்டுக்கல் என பல ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்தனர். போராட்டத்தின் காரணமாக, வெளிப்புற சிகிச்சை நேர குறைப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “காலை 8 முதல் 11 வரை நோயாளிகள் சிகிச்சை பெற பதிவு செய்யப்படும். வெளிப்புற சிகிச்சைக்கு வந்தபோது காலை 10 மணிக்குள்ளேயே மருத்துவ அட்டை பதிவு செய்யும் பணி நிறுத்தபப்பட்டது. வெளிப்புற சிகிச்சையும் 10 மணி வரை மட்டுமே தரப்பட்டது. வழக்கமாக 11 மணி வரை பதிவு செய்தால் மதியம் 2 மணி வரை சிகிச்சை தரப்படும். வெளியூரில் வந்து சிகிச்சை கிடைக்காமல் தவிக்கிறோம்.
கொல்கத்தா சம்பவத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தால் உண்மையில் கிராம மக்களும், ஏழைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா சம்பவத்தில் தொடர்புடையோர் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை காக்க வேண்டும். ஏழைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறோம்.” என்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் ரத்ததான முகாம் பயிற்சி டாக்டர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் என 200-க்கும் மேற்பட்டோர் இன்று பணி செய்தனர்.கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடர்வதாக தெரிவித்தனர். அவசர கால சிகிச்சையை தொடர்கிறோம் என்று குறிப்பிட்டனர். பணியை செய்துவிட்டுதான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.
வெளிப்புற சிகிச்சை பிரிவு காலை 10 மணிக்கு மூடப்படும் என சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் ஊழியர்கள் தெரிவித்தனர். காலையில் வரும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.அதேபோல் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்கும் போராட்டம் நடந்தது. சட்டக்கல்லூரி மாணவர்களும் இவ்விவகாரம் தொடர்பாக மாத்தூர்- காலாப்பட்டு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT