Published : 19 Aug 2024 03:57 AM
Last Updated : 19 Aug 2024 03:57 AM

‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீடு

சென்னை: சென்னையில் நேற்று நடந்த விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதிநூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் தலைசிறந்த தலைவர் கருணாநிதி. இவர் தனது அரசியல் ஆளுமையை தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் இந்திய அரசியலில் விரிவுபடுத்தியவர். தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டு மக்கள் நலனுக்காகவும், சமூகநீதிக்காகவும் பாடுபட்டவர். தனது அரசியல் பயணத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்து,விளம்புநிலை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபட்டார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். மக்களாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த அரும்பாடு பட்டார்.

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்ற அனுமதி பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து முதல் முதல்வராக1974-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

மக்களாட்சி தத்துவத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து, மத்தியில் நிலையான அரசை அமைப்பதற்கு வழிவகுத்தவர். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அமைந்தஅரசு, பெரும்பான்மை இழந்தபோது,அந்த அரசுக்கு ஆதரவளித்து முக்கிய பங்காற்றிய கருணாநிதியின் செயல்பாடு, இதற்கு சிறந்த உதாரணம்.

மக்களுடன் ஆழமான தொடர்பைஏற்படுத்திக் கொள்வது எப்படி என்பது குறித்து ஒவ்வொரு அரசியல்வாதியும் கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள வேண்டும். கவிதை, தமிழ்இலக்கியம், திரைத்துறை ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார்.

இத்தகைய சிறப்பு மிக்கமாபெரும் தலைவரின் நினைவு நாணயத்தை வெளியிட வாய்ப்புஅளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா, பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில், கருணாநிதி பற்றியசிறப்பு காணொலி திரையிடப்பட்டது. ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதன்பேரில், விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, நேற்று மாலை கடலோர காவல்படை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு வந்த ராஜ்நாத் சிங்கை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், முதல்வர் ஸ்டாலின், ராஜ்நாத் சிங்,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். அதில், கருணாநிதியுடன் அமர்ந்திருப்பது போல ராஜ்நாத் சிங் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல், இலக்கியம், சமூகப் பணிகள் என பல்வேறு களங்களில் உயர்ந்து விளங்கிய தலைவராக திகழ்ந்த கருணாநிதி, தமிழக வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் எப்போதும் அக்கறை கொண்டு விளங்கினார். பன்முகத் திறமை கொண்ட அவர், தனது எழுத்துகள் மூலம் தமிழ் மொழி, கலாச்சாரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் மக்களால் இன்றும் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கிய ஆற்றல், அவரது படைப்புகளின் மூலம் பிரகாசித்ததுடன், அவருக்கு ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தையும் பெற்றுத் தந்துள்ளது.

அவரது கொள்கைகள், அவரது பணிகளை இந்த நாணயம் என்றென்றும் நினைவூட்டும். கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வை, சிந்தனைகள், நம் தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நன்றி: பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், நாணய வெளியீட்டு விழா வெற்றி பெற ஆதரவு அளித்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x