Published : 19 Aug 2024 06:13 AM
Last Updated : 19 Aug 2024 06:13 AM

நாட்டின் தலைவராக சிந்தித்து செயல்பட்டதால் இந்தியா போற்றும் தலைவராக உயர்ந்தார் கருணாநிதி: நாணய வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்து செயல்பட்டதால்தான் அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கருணாநிதி உயர்ந்து நிற்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார். இவ்விழாவுக்கு தலைமையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த கருணாநிதியின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்துள்ளது மிகவும் பொருத்தமானது. கருணாநிதி மறைந்த நாள் முதல் தினசரி அவரது புகழைத்தான் போற்றுகிறோம். கடந்த ஓராண்டாக அவரது நூற்றாண்டை முன்னிட்டு சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவரை போற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். இந்த பெருமைக்கெல்லாம் மகுடமாக கருணாநிதி உருவம் தாங்கிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதியை கவுரவப்படுத்தும் வகையி்ல் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்பியல் பேராசியராக தனது பணியை தொடங்கி, அரசியல் மீதான விருப்பத்தால் கடுமையாக உழைத்து உயர்ந்தவர் ராஜ்நாத் சிங். படிப்படியாக வளர்ந்து, எம்எல்ஏவாகி அமைச்சராகவும் அதன்பின், உத்தரபிரதேச முதல்வராகவும் உயர்ந்து தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் உயர்ந்துள்ளார். அவரைத்தான் நான் முதலில் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க விரும்பினேன். வெவ்வேறு அரசியல் பின்னணிகள் கொண்டவர்களிடமும் அவர் நல்ல தொடர்புகளை வைத்திருப்பவர்.

இன்று நாம் பார்க்கும் நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கருணாநிதிதான். அவரது சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது. கடந்த ஆக.15-ம் தேதி 78-வது சுதந்திர தினத்தை கொண்டாடினோம். அன்று நான் மட்டுமல்ல, அத்தனை மாநில முதல்வர்களும் கொடியேற்றினார்களே, அந்த உரிமையை பெற்றுத் தந்தவரும் கருணாநிதிதான். அதனால்தான், இன்று அகில இந்தியாவும் போற்றும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். ஒரு கட்சியின் தலைவராக; ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக எப்போதும் சிந்தித்தார், செயல்பட்டார். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது கை கொடுத்தவர்தான் கருணாநிதி.

நாணயம் என்பதற்கு தமிழில் இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்குப் பெயரும் நாணயம்தான். சொன்னதையெல்லாம் செய்து காட்டியது, கருணாநிதியின் நாணயத்துக்கு அடையாளம். அவரது வழியில் இன்றைய திராவிட மாடல் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, கருணாநிதியின் அரசாக செயல்பட்டு வருகிறது.

“சட்டப்பேரவையை அதிகார அமைப்பாக இல்லாமல் சமூகத்துக்கு நன்மை செய்யும் அமைப்பாகக் கருத வேண்டும்” என்றார் தந்தை பெரியார். அப்படித்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இது எனது அரசல்ல; நமது அரசு. ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு. திராவிடக் கருத்தியல் கொண்ட அரசு. இதனை என்னுள் ஏற்படுத்தியவர் கருணாநிதி. அந்த வகையில் கருணாநிதியே இயக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்துக்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும் என்று சொன்னவர் கருணாநிதி. இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் அவரது சாதனைதான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விழா துளிகள்..

  • கருணாநிதி நினைவிடம் முதல் கலைவாணர் அரங்கம் வரை வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
  • கும்பாட்டம், நாட்டிய அஞ்சலி, பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள், திருவள்ளுவர், அம்பேத்கர் வேடமிட்டும் தொண்டர்கள் வந்திருந்தனர்.
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூச்செண்டு கொடுத்து வரவேற்று அரங்குக்கு அழைத்து சென்றார்.
  • விழாவில் சிறப்பு விருந்தினருக்கு கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் அடங்கிய நினைவு பரிசு வழங்கப்பட்டது.
  • கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அவரது வாழ்வியல் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
  • ராஜ்நாத் சிங், தனது பேச்சின் நடுவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக கைதட்டுமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x