Last Updated : 07 May, 2018 08:22 AM

 

Published : 07 May 2018 08:22 AM
Last Updated : 07 May 2018 08:22 AM

சிறைத் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களை ஏவல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது: பாதுகாப்பு பணிக்கு மட்டுமே அனுப்ப ஏடிஜிபி உத்தரவு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களை ‘ஆர்டர்லி’களாக (ஏவல் பணியாளர்களாக) பயன்படுத்தக்கூடாது எனவும், பாதுகாப்பு பணிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும் சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2017-ம் ஆண்டில் சிறைத்துறைக்கான இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு நடைபெற்றது.

அதில் தேர்வு செய்யப்பட்ட 482 பேருக்கு திருச்சியிலும், 184 பேருக்கு கோவையிலும், 137 பேருக்கு சேலத்திலும், 121 பேருக்கு வேலூரிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு அண்மையில் சிறைச்சாலை வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

இதேபோன்று, பயிற்சி முடித்து புதிதாக வரக்கூடிய காவலர்களை மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள் மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவது மட்டுமின்றி, அங்குள்ள அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் ஆர்டர்லிகளாகவும் பணியமர்த்திக் கொள்வது வழக்கம்.

வீட்டு வேலைகள் செய்ய..

இவ்வாறு நியமிக்கப்படும் காவலர்களை அலுவலக பணியுடன் நிறுத்திக் கொள்ளாமல் வீட்டு வேலை, சமையல் வேலை, துணி துவைப்பது, நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது, குழந்தைகளைப் பராமரிப்பது என பல்வேறு பணிகளிலும் ஈடு படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பணியின்போது காவலர்கள் இறப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 1979-ம் ஆண்டு ஆர்டர்லி முறையை ஒழித்து எம்ஜிஆர் சட்டம் இயற்றியும் இதுவரை அது தொடர்வதேன், ஆர்டர்லியாக தொடர்பவர்கள் எத்தனை பேர் என பட்டியல் அளிக்க வேண்டும் என டிஜிபி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள் மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு குறிப்பாணை அனுப்பப் பட்டுள்ளது.

களப்பணி பயிற்சி

அதில், 2017-ம் ஆண்டில் இரண்டாம் நிலைக் காவலர்க ளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வேலூர், திருச்சி, கோவை, சேலத்தில் 6 மாத கால அடிப்படைப் பயிற்சி, ஒரு மாத களப் பணி பயிற்சிக்குப் பின்னர், சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

யாருக்கு என்ன பணி?

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இக்காவலர்களை சிறைய ில் ஏவல் பணி, அலுவலகப் பணிக்கு பயன்படுத்தாமல், பாதுகாப்புப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் தனி கவனம் செலுத்தி, எந்தெந்த பணிக்கு காவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்துடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறைகளில் பாதுகாப்புப் பணிக்கு கூடுதலாக ஆட்கள் கிடைக்கும் எனவும், பணிச்சுமை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிறைக்காவலர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x