Published : 18 Aug 2024 10:40 PM
Last Updated : 18 Aug 2024 10:40 PM
புதுச்சேரி: கொல்கத்தா சம்பவத்தினால் ஜிப்மரில் காலவரையற்ற போராட்டம் தொடரும் நிலையில் இன்று வார்டுக்குள் துண்டு பிரசுரம் விநியோகம், கூட்டங்கள் நடந்தன. போராட்டம் வலுவடையும் வாய்ப்புள்ள நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் விதிகளின்படி நடவடிக்கை என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வெளிப்புற சிகிச்சை, ஆப்ரேஷன் தியேட்டர் பணிகளை புறக்கணித்து வளாகத்துக்குள் பேரணி, அதைத்தொடர்ந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவு, முக்கிய வார்டுகள், பிரசவ பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்றும் போராட்டம் ஜிப்மரில் தொடர்ந்தது. அதன்படி மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி உரையாடினர். பெண்களுக்கு பணியிட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தினர். சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு தொடர்பான பிற சட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் வார்டுகளில் இவ்விவகாரம் தொடர்பாகவும், போராட்டம் பற்றிய துண்டு பிரசுங்களை மாணவர்கள், டாக்டர்களுடன் இணைந்து விநியோகித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
திங்கள்கிழமை அன்று ஜிப்மருக்கு அதிகளவில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சைக்கு வர வாய்ப்புள்ளது. இச்சூழலில் போராட்டங்கள் தொடரும் என்பதால் நோயாளிகள் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் விதிகளின் படி நடவடிக்கை: ஜிப்மர் இயக்குநர் உத்தரவுப்படி அறிவிப்பு - இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவுப்படி நிர்வாக துணை இயக்குநர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பிய உத்தரவு: கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி சம்பவத்தைத் தொடர்ந்து நாடு தழுவிய மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஜிப்மர் மருத்துவர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்துக்கு இங்குள்ள சில சங்கங்கள் பல வழிகளில் தங்கள் ஆதரவை அளித்துள்ளன. ஜிப்மர் நடத்தை விதிகளில் 7-னை அனைத்து ஊழியர்களின் கவனத்துக்கு தெரிவிக்கிறோம்.
வேலைநிறுத்தமோ, வேலைநிறுத்ததை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் இவ்விதியை மீறுவதாகும். குறிப்பாக அனுமதியின்றி மொத்தமாக விடுப்பு எடுப்பது, முன் அனுமதியின்றி பணியிடத்திலிருந்து வெளியேறுத்தல் ஆகியவை விதியை மீறி செயல்படுவதாக கருதப்படும். பணியில் இல்லாவிட்டால் அக்காலத்தில் ஊதியம் பெற முடியாது.
இதில் மிக முக்கியமாக ஜிப்மர் நோயாளிகளை பராமரித்து சேவைகளை தரும் நிறுவனம். அதனால் டாக்டர்கள், ஊழியர்கள் சேவைகளை இழக்க முடியாது. அவர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...