Published : 18 Aug 2024 09:32 PM
Last Updated : 18 Aug 2024 09:32 PM
சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் தலைவராக 2019-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு பிப்.10-ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், புதிய தலைவரை தேர்வு சேய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, கடந்த ஜூலை மாதம் தனது பரிந்துரையை அளித்தது. அந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த1989-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவர் கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இவர் வரும் அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1989-ல் காஞ்சிபுரம் துணை ஆட்சியராக பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா, கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு சென்றார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், தமிழக பணிக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு நகராட்சி நிர்வாகத் துறை செயலராக இருந்த நிலையில், புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவுக்கு தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலராக முதல்வரின் செயலராக உள்ள 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நா.முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT