Last Updated : 18 Aug, 2024 06:14 PM

 

Published : 18 Aug 2024 06:14 PM
Last Updated : 18 Aug 2024 06:14 PM

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி நூலகம், பேருந்து நிலையம், மருத்துவமனை திறப்பு: தமிழக அரசு தகவல்

கருணாநிதி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஓராண்டாக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நூலகம், பேருந்து நிலையம், மருத்துவமனை ஆகியவை திறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக, கடந்தாண்டு மே.22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தலைமைச்செயலர் தலைமையில் ஜூலை 4, 26, ஆக.3, அக்.16 மற்றும் நவ.1ம் தேதிகளில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையில், அமைச்சர்கள் தலைமையில் 12 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

நிகழ்ச்சிகள்: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடந்தாண்டு ஜூ்ன் 2-ம் தேதி காந்தியடிகள் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியால், ‘"கலைஞர் 100" இலச்சினை வெளியிடப்பட்டது. ஜூன் 15-ம் தேதி கிண்டி கி்ங் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையையும், மதுரையில் ஜூலை 15-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நூல்கத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்தார்.

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த 73,206 பேருக்கு முதல்வர் சான்றிதழ் வழங்கினார். "www.kalaignar100.com" என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மதுரை அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஆகியவை திறக்கப்பட்டது. கருணாநிதியின் நினைவிடம் கடந்த பிப்.24ம் தேதியும், திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிப்பட்டியில், கருணாநிதி நூற்றாண்டு, ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம் பிப்.27ம் தேதியும் திறக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு: கருணாநிதி நூற்றாண்டு விழாவை கடந்தாண்டு ஜூன் முதல் இந்தாண்டு ஜூன் வரை கொண்டாட ரூ.ரூ.8.34 கோடி ஒதுக்கப்பட்டது. பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரொக்கத் தொகை வழங்க கலைஞர் நூற்றாண்டு தமிழ் ஊக்குவிப்பு நிதி, கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புக் குழுக்களில் கலைஞர் குழுவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் வாழும் 275 தமிழறிஞர்களைச் சிறப்பிக்க, ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
அமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட 12 குழுக்கள் சார்பில், கருத்தரங்கம், புகைப்பட கண்காட்சி, பட்டிமன்றம், முத்தமிழ் தேர் பவனி, கலை நிகழ்ச்சி, கவியரங்கம், மலர் மற்றும் குறும்படம் வெளியீடு , மெல்லிசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன

துறைவாரியாக நிகழ்வுகள்: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் பல்வேறு கடன்கள் வழங்க முகாம்கள், தீயணைப்புத்துறை சார்பில் பயிற்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 100 மேம்பாலங்கள் புதுப்பித்தல் மற்றும் தீயணைப்பு துறை சார்பாக 35 மாவட்டங்களில் மரக்கன்று நடுவிழா, சுற்றுலாத்துறை சார்பில் 16 மாவட்டங்களில் தூய்மைப் பணி முகாம். அருங்காட்சியகங்கள் துறை சார்பில் மாணவ மாணவியருக்கு போட்டிகள், தோட்டக்கலைத்துறை சார்பில் செம்மொழிப்பூங்காவில் மலர்க்கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டன.

கருணாநிதி நூற்றாண்டு விழாவிவை முன்னிட்டு, மாவட்டம் தோறும் சிறப்பாக கலைவிழா, நலத்திட்ட விழா, பரிசளிப்பு விழா என மூன்று நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, இன்று மாலை 6.50 மணிக்கு கருணாநிதி நூற்றாண்டு நாணயம், கலவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x