கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி வாழ்த்து; முதல்வர் ஸ்டாலின் நன்றி

ராகுல் | ஸ்டாலின்
ராகுல் | ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா குறித்து ராகுல் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியின் அசாதாரண வாழ்க்கையை போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

கலைஞர் கருணாநிதியின் சமூக முற்போக்கான தொலைநோக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் கொண்ட அசையாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழி வகுத்தது. அவரது தீர்க்கமான தலைமையின் கீழ் தான், தமிழகம் ஒரு துணிச்சல்மிகு லட்சிய மாற்றத்துக்கான பாதையில் இறங்கியது.

அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்துக்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை ஒரு முன்னோடியாக உறுதியாக நிலைநிறுத்த உதவியது மற்றும் பல மாநிலங்களை பெரிய கனவு காண தூண்டியது. இந்தச் சந்தர்ப்பத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்ட விரும்புகிறேன். இந்தியாவை பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஸ்டாலின் கொண்டுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அன்பு சகோதரருக்கு நன்றி. கலைஞரின் கனவை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in