Published : 18 Aug 2024 09:10 AM
Last Updated : 18 Aug 2024 09:10 AM
சென்னை: கோயில் சொத்துகளை அரசு திட்டமிட்டு அழிக்கிறது என்று இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அயனாவரம் அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் இடத்தில், கொளத்தூர் மீன் சந்தை கட்டுவது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளனர். கோயில் இடத்தை அரசின் திட்டங்களுக்குப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, பக்தர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். ஆனால், நீதிமன்றம் வணிக நோக்கத்தை மட்டுமே கவனத்தில்கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு வழிகளில் கோயில் சொத்துகளை திட்டமிட்டு அழித்து வருகிறது. கோயில் சொத்துகளை ஆன்மிகப் பணிக்காகவும், பக்தர்கள் வசதிக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கோயில் இடங்களில் குத்தகை, வாடகை தராமல் ஆக்கிரமித்துள்ளவர்கள் பட்டியல் ஒவ்வொரு கோயில் வாசலிலும் பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறையை இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT