Published : 18 Aug 2024 10:38 AM
Last Updated : 18 Aug 2024 10:38 AM

“கருணாநிதி ஒரு உயர்ந்த ஆளுமை, நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் நாட்டம் கொண்டவர்” - பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது.

கருணாநிதி இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஒரு உயர்ந்த ஆளுமை. அவர் தமிழகத்தின் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார்.

ஒரு அரசியல் தலைவராக, சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கருணாநிதி.

பன்முகத் திறமைகளை உடைய ஆளுமையாகத் திகழ்ந்த கருணாநிதி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்க்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கியத் திறன் அவரது படைப்புகளால் பிரகாசித்தது மட்டுமின்றி அவருக்கு 'கலைஞர்' என்ற அன்பான பட்டத்தையும் பெற்றுத் தந்தது.

அவரது நினைவு நாணயம் வெளியிடப்படும் நிகழ்வு, கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவரால் நிலைநிறுத்தப்பட்ட லட்சியங்களைப் போற்றுவதாகவும் அமைந்துள்ளது. இந்த நாணயம் அவரது மரபு மற்றும் அவரது சேவையின் நீடித்த தாக்கத்தை நினைவூட்டுவதாக இருக்கும்.

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, ​​கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனைகளும் தேசத்தின் பயணத்தைத் தொடரும்.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடையட்டும்” இவ்வாறு பிரதமர் மோடி அக்கடிதத்த்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x