Published : 18 Aug 2024 09:10 AM
Last Updated : 18 Aug 2024 09:10 AM
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து திருமாவளவன் வாழ்த்து பெற்றார்.
திருமாவளவன் பிறந்தநாளையொட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள், திருமாவளவனுக்கு பொன்னாடை, மாலை, பூங்கொத்து போன்றவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருமாவளவன், ரத்த தான முகாமையும் தொடங்கிவைத்தார். பின்னர் கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், க.பொன்முடி, தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆர்.நல்லகண்ணு இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வந்த திருமாவளவனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவ சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடுதோள் நிற்கும் தோழமை, சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.
இதேபோல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், கனிமொழி எம்.பி., தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மநீம தலைவர் கமல்ஹாசன், வி.கே. சசிகலா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல், விசிக மாநில அமைப்புச் செயலாளர் லயன் ஆர்.பன்னீர்தாஸ், 190-வது வட்டச் செயலாளர் சிட்டு (எ) ஆமோஸ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். ‘திருமாவளவன்’ என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைதளத்தில் டிரெண்டிங்கில் இருந்தது. பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் திருமாவளவன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT