Published : 18 Aug 2024 06:55 AM
Last Updated : 18 Aug 2024 06:55 AM
சென்னை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை பள்ளிக்கல்விதுறையுடன் இணைக்கும் முயற்சியை அரசு கைவிடாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆங்கிலேயர் காலத்தில் கொடூரகைரேகை சட்டம் போன்ற கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலை கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்து அமைக்கப்பட்டவையே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகள்.
ஆங்கிலேயர் காலத்திலேயே இப்பள்ளிகளைக் கட்டமைக்க ‘கள்ளர் காமன் பண்ட்’ நிதியைஉருவாக்கி, தங்கள் நிலங்களையும், உழைப்பையும் முதலீடாக வழங்கி, இப்பள்ளிகளை நிறுவினர்.
இத்தகைய நெடிய வரலாறு கொண்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், சுதந்திரத்துக்கு பிறகு தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின்கீழ் இயங்கி வருகின்றன. தற்போது, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மொத்தம் 292 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளும், அதோடு இணைந்து 57 மாணவர் விடுதிகளும் உள்ளன.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கள்ளர் மாணவர் விடுதிகளை பராமரிக்க முடியவில்லை என்ற கண்துடைப்பு காரணத்தைக் கூறி, 2022-ம் ஆண்டு கள்ளர் மாணவர் விடுதிகளை, பள்ளிக்கல்வி துறையுடன் இணைக்க முயற்சி மேற்கொண்டபோது, கள்ளர் சமுதாயமக்களிடம் எதிர்ப்பு எழுந்தது. திமுக அரசு தற்போது கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால், இதுவரையில் இச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்விகற்கக்கூடிய தளங்கள், வேலைவாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற பல அடிப்படை உரிமைகள் பறிபோகும்.
எனவே இந்த நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக கைவிடவேண்டும். இல்லாவிடில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்துவோம். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT