Published : 21 May 2018 09:24 AM
Last Updated : 21 May 2018 09:24 AM

மாநகராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாததால் பராமரிப்பின்றி கிடக்கும் உடற்பயிற்சி கூடங்கள்: உபகரணங்களைப் பயன்படுத்த முடியாமல் இளைஞர்கள் அவதி

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாத தால் மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடங்கள் உரிய பராமரிப்பின்றி கிடக்கின்றன. இதனால் மாநகராட்சியின் திட்டத்தால் பயனில்லை என இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 61 சதவீத இறப்புகள், தொற்றல்லாத நோய்களால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியில் 213 விளையாட்டு திடல்களும், 98 உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த உடற்பயிற்சிக் கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் முறையாக கண்காணிக்காததால், அவை உரிய பராமரிப்பின்றிக் கிடப்பதாக இளைஞர்கள் புகார் தெரிவித் துள்ளனர்.

அரசியல் காரணங்களால் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்த உடற்பயிற்சி கூடம், ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளியான பிறகு திறக்கப்பட்டது. இந்நிலையில் மகாகவி பாரதி நகர், 18-வது மத்திய குறுக்குத் தெருவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் இருந்தும், பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது.

“5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடின்றி கிடக்கும் இந்த உடற்பயிற்சிக் கூடத்தில், பல உபகரணங்கள் திருட்டு போயுள்ளன. அதனால் நாங்கள் மாதம் ரூ.500 கட்டணம் செலுத்தி தனியார் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்கிறோம்” என்று அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர். இதுபோன்று பல உடற்பயிற்சிக் கூடங்களில் ஏற்கெனவே இருந்த உபகரணங்கள் தற்போது காணா மல் போயுள்ளன. அவற்றை மீட்டுக் கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

விளையாட்டு, உடற்பயிற்சியில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மாநகராட்சியில் இருந்தும், உடற்பயிற்சிக் கூடங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கும்போது, அவர்களிடம் ஆலோசிப்பதில்லை. விநியோகிக்கப்பட்ட உபகரணங்கள் தரமானவையா என்று அவர்களை வைத்து சோதிப்பதும் இல்லை.

வியாசர்பாடி ஷர்மா நகர், பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் திறக்கப் படுவதில்லை.

மாநகராட்சி வசம் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பதே இல்லை. அப்படி கண்காணித்திருந்தால் 4 ஆண்டுகளாக அவை பூட்டிக்கிடப்பது தவிர்க்கப்பட்டிருக்கும். மேலும் இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் உரிய பராமரிப்பின்றிக் கிடப்பதாக இளைஞர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்தராவிடம் கேட்டபோது, “உடற்பயிற்சி கூடங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர் உள்ளிட்ட வேறுசில பகுதிகளில் உள்ள மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றவற்றின் மீதும் உரிய கவனம் செலுத்தப்பட்டால், தாங்கள் பயன்பெறுவோம் என்று அப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x