Published : 24 Aug 2014 10:16 AM
Last Updated : 24 Aug 2014 10:16 AM

அறிவியலும் கற்பனைத் திறனும் இணையும்போது குழந்தைகள் எதையும் கற்றுக் கொள்வார்கள்: சாகித்ய அகாடமியின் ‘பால புரஸ்கார் விருது’ பெற்ற ஆயிஷா நடராசன் பேட்டி

குழந்தை இலக்கிய எழுத்தாளரான ஆசிரியர் ஆயிஷா நடராசன், சாகித்ய அகாடமியின் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாகித்ய அகாடமி அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல, குழந்தைகள் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், இளைஞர் இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 27 இந்திய மொழிகளுக்கும் தனித்தனியே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளை வெள்ளிக்கிழமை சாகித்ய அகாடமி வெளியிட்டது. தமிழ் மொழியில் பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு கடலூரைச் சேர்ந்த ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரம் கொண்டது.

விக்கிரமாதித்தன், வேதாளம் கதைகளை அறிவுப்பூர்வமாக மாற்றி மருத்துவத் துறையின் சாதனைகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அவர் எழுதியுள்ள ‘விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்’ என்ற புத்தகத்துக்காக இந்த விருது கிடைத்திருக்கிறது. ஆயிஷா நடராசன், கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நல்லாசிரியர் விருது பெற்ற இவர், இதுவரை 42 குழந்தை புத்தகங்கள் உட்பட 72 நூல்கள் எழுதியுள்ளார்.

விருது குறித்து ஆயிஷா நடராசன் கூறும்போது, ‘‘குழந்தை கள் வாசிக்கவில்லை என்று கூறுகிறோம். ஆனால், அவர்கள் படிப்பதற்கு என்ன வைத்திருக்கி றோம். குற்றம் புரியும் பெரியவர் களுக்குதான் நீதி போதனைகள் தேவை. கற்பனைத் திறன் கொண்டவர்களாக குழந்தைகள் வளர்ந்தால்தான் அவர்கள் மாமனிதர்கள் ஆவார்கள். இல்லை யென்றால் இயந்திரங்களாக உருவாக்கப்படுவார்கள். அறிவிய லும் கற்பனைத் திறனும் இணையும்போது குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக் கொள்வார்கள். 2005-ம் ஆண்டு தேசிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழு கூறியது போல, மனப்பாடத் தன்மையில் இருந்து படைப்பாக்கத் தன்மை நோக்கி நமது கல்வி முறை நகர வேண்டும்’’ என்றார்.

அபிலாஷுக்கு யுவ புரஸ்கார் விருது

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது தமிழில் ஆர்.அபிலாஷுக்கு ‘கால்கள்’ என்ற நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தைச் சேர்ந்த அபிலாஷ், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ‘இன்றிரவு நிலவின் கீழ்’, ‘கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்’, ‘புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்’, ‘இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x