Last Updated : 17 Aug, 2024 08:00 PM

1  

Published : 17 Aug 2024 08:00 PM
Last Updated : 17 Aug 2024 08:00 PM

“மாஞ்சோலை தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்” - கிருஷ்ணசாமி

கோவை: மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் சனிக்கிழமை (ஆக.17) செய்தியாளர்களிடம் கூறியது: “மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போது பெண்மணி தைரியமாக நள்ளிரவில் நடந்து செல்ல முடிகின்றதோ அப்போது தான் உண்மையான சுதந்திரம் என காந்தியடிகள் கூறியிருக்கிறார்.

கொல்கத்தா சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சிபிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. மாநில அரசிடம் இருந்து சட்டம் ஒழுங்கை சிறிது காலம் மத்திய அரசு கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வழக்கில் சிபிஐ விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் 1929-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் 99 வருடம் குத்தகைக்கு பெற்றார்கள். அவர்களின் குத்தகை 2028-ல் நிறைவடைகிறது. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் அங்கு வசிக்கின்றனர்.

அங்கிருந்து கம்பெனி தான் வெளியேற வேண்டுமே தவிர, மக்கள் அல்ல. கம்பெனி மூலமாக மக்களை வெளியேற்றும் முயற்சி நடக்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அங்கேயே இருந்து வனத்தைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த விவகாரத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளேன். மாநில அரசு இதை கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

வால்பாறை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, ஏற்காடு என பல பகுதிகளில் இந்த மாதிரி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர். இதைக் கருத்தில் எடுத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். மத்திய அரசின் துறைகளில் 22 சதவீத ஒதுக்கீடு, மாநில அரசில் 19 சதவீத இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 18 சதவீதம் இடஒதுக்கீடு கடைநிலை அரசுப் பணிகளில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

ஏ, பி பிரிவு அரசுப் பணிகளில் 3 சதவீதம் கூட நிரப்பப்படவில்லை. அதை நிரப்புவதற்கு பதிலாக அருந்ததியினருக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தலைபட்சமாக அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து, முன்னுரிமை கொடுத்து அருந்ததியினரை மட்டுமே பட்டியல் இன இடங்களை நிரப்பி விட்டனர். இதை அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை. பட்டியல் சமூகத்தில் உள்ள 3 சமுதாய பிரதிநிதிகளை அழைத்து, தமிழக முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். இதில் பிரச்சினைகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்று கிருஷ்ணசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x