Last Updated : 17 Aug, 2024 04:47 PM

 

Published : 17 Aug 2024 04:47 PM
Last Updated : 17 Aug 2024 04:47 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளும் மூடல்: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

மருத்துவர்கள் போராட்டம் | படங்கள்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கேட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டன.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் இன்று காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தி பேரணி சென்றனர்.

மருத்துவர்கள் பேரணி

இதில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் நாகராஜன், பொருளாளர் திருலோகச்சந்திரன், திண்டுக்கல் இந்திய மருத்துவ சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் லலித்குமார், பொருளாளர் பிரேம்நாத், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் வினித், செயலாளர் நந்தினி, துணைச் செயலாளர் ராமானுஜம், பொருளாளர் யோகேஷ் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூடப்பட்ட தனியார் மருத்துவமனை

இதேபோல், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. அங்கு உள் நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x