Last Updated : 17 Aug, 2024 04:45 PM

 

Published : 17 Aug 2024 04:45 PM
Last Updated : 17 Aug 2024 04:45 PM

புதுச்சேரியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அமைச்சரிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜிவ் காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் அம்மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் புதுச்சேரி மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் முதல் ராஜிவ் காந்தி சதுக்கம் வரையிலான உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதியினை ஒதுக்குமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது இந்தப் பாலத்துக்கான ஆய்வுப் பணிகளுக்காகவும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காகவும் முன்னமே போதிய நிதி ஒதுக்கப்பட்டு விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டால் உடனே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு மேம்பாலப் பணிகளை ஆரம்பிக்கலாம் என எடுத்துரைத்தார்.

மேலும், இந்திரா காந்தி சதுக்கம் முதல் முள்ளோடை வரையுள்ள இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கவும், ஒருமுறை தளர்வு அடிப்படையில் நிதி ஒதுக்கி புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுமாறும் மத்திய அமைச்சரிடம் லட்சுமிநாராயணன் கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்களை கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இந்திராகாந்தி சதுக்கத்தையும், ராஜீவ் காந்தி சதுக்கத்தையும் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கும், புதுச்சேரி - கடலூர் சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்தவும் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தரைவழிப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.

இந்தச் சந்திப்பின் போது புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x