Published : 17 Aug 2024 03:11 PM
Last Updated : 17 Aug 2024 03:11 PM

டாஸ்மாக் மது விற்பனையை மாதம் 5% அதிகரிக்க இலக்கு நிர்ணயமா? - ராமதாஸ் சாடல்

மதுபானக் கடைகள்

சென்னை: மது விற்பனை இலக்கை எட்டும் வகையில் மது விற்பனையை ஒவ்வொரு மாதமும் 5% அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நிர்வாகம் ஆணையிட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மக்கள் நலன் காப்பதாகக் கூறிக் கொள்ளும் அரசு, மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மது விற்பனை 4% குறைந்திருப்பது குறித்து தமிழக அரசு பெரும் கவலை கொண்டிருப்பதாகவும், மது விற்பனை இலக்கை எட்டும் வகையில் மது விற்பனையை ஒவ்வொரு மாதமும் 5% அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நிர்வாகம் ஆணையிட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மக்கள் நலன் காப்பதாகக் கூறிக் கொள்ளும் அரசு, மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மது விற்பனையை அதிகரிப்பதற்காக விற்பனை அதிகாரிகள் மதுக்கடைகளுக்கு செல்ல வேண்டும் என்றும், மது விற்பனை இலக்கு எட்டப்படவில்லை என்றால் மாதாந்திரக் கூட்டத்தில் விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதிகாரிகளுக்கு வாய்மொழியாக டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், விற்பனை இலக்கை தொடர்ந்து இரு மாதங்களுக்கு எட்டத் தவறும் விற்பனையாளர்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்படும்; அதன் பிறகும் விற்பனையை அதிகரிக்கவில்லை என்றால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நல அரசா? மது ஆலை அதிபர்கள் நல அரசா? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.

மது விற்பனை குறைந்தால், ஆஹா மக்கள் மது போதையிலிருந்து விடுபடுகிறார்களே? என்று நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியது அரசு தான். ஆனால், மகிழ்ச்சி அடைவதற்கு மாறாக பதற்றம் அடைவது ஏன்? என்பது தான் புரியவில்லை. மது விற்பனைக்காக ஒரு போதும் இலக்கு நிர்ணயம் செய்வதில்லை; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதற்காகத் தான் அரசு சார்பில் மது வணிகம் செய்கிறோம் என்று முதலமைச்சரும், மதுவிலக்குத் துறை அமைச்சரும் பல்வேறு தருணங்களில் கூறி வருகிறார்கள். ஆனால், இன்னொரு புறம் மது வணிகத்திற்கு அரசே இலக்கு நிர்ணயித்திருப்பது தலைகுனிய வேண்டிய செயலாகும்.

மது வணிகத்தை விற்பனையாளர்கள் எவ்வாறு அதிகரிப்பார்கள்? என்பது புரியவில்லை. சாலையில் செல்வோரையெல்லாம் மது குடித்து விட்டு செல்லுங்கள் என்று விற்பனையாளர்கள் அழைக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறதா? என்று தெரியவில்லை. மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தொழுநோயாளியின் கைகளில் இருக்கும் வெண்ணெய்க்கு ஒப்பானது என்று அண்ணா கூறினார். ஆனால், அவர் வழியில் வந்ததாக கூறிக் கொள்ளும் அரசுகளோ அந்த வெண்ணெய்க்காக அலைகின்றன.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் அரசை நடத்த வேண்டும் என்றால் அதை விட அவமானம் எதுவும் இல்லை. படிப்படியாக மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது பதவிக்காலம் முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். எந்தெந்த மாதங்களில் எவ்வளவு மதுக்கடைகள் மூடப்படும் என்பது குறித்த கால அட்டவணையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x