Published : 17 Aug 2024 11:34 AM
Last Updated : 17 Aug 2024 11:34 AM

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடக்கம்: ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரம்பும்

ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார். ரூ.1916 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படவுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் வறட்சிப்பகுதிகளில் உள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அதனை பயன்படுத்தும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கடந்த 50 ஆண்டுகளாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டது.

நிதி ஒதுக்கீடு: இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு பணிகளுக்காக, கடந்த 2016- ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூ. 3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக முதல்வராக பதவியேற்ற பழனிசாமி, 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கின. இந்த திட்டத்திற்கு, ரூ. 1,652 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்பின் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 80 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பின் திட்டத்தின் செயல்பாடு, பல்வேறு காரணங்களால் தாமதமானது.

தொடக்க விழா: இதனைத் தொடர்ந்து வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நீர்வளத்துறை மற்றும் திட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், திட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும், பவானி ஆற்றில் உபரி நீர் வரும்போது, திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வந்த நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நீர் எடுக்கக்கூடிய, பவானி காலிங்கராயன் அணைக்கட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நீரேற்று நிலையத்தில், இன்று காலை திட்ட தொடக்க விழா நடந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னையில் நடந்த இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

திட்டம் கடந்து வந்த பாதை: கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு மேலாக வெள்ளியங்காடு பகுதியில் இருந்து, அத்திக்கடவு பகுதிக்கு குழாய் அல்லது குகை மூலம் நீரைக் கொண்டு வந்து, அங்கிருந்து வாய்க்கால் மூலமாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட வறட்சிப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை நிரப்புவதே அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்று அழைக்கப்பட்டது.

இந்த திட்டதிற்காக கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி உதவி கோரியது. அப்போது, இந்த திட்டத்திற்கு அடிப்படையான நீர் ஆதாரம் குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியது. இதற்கு சரியான விளக்கத்தை தமிழக அரசு அளிக்காத நிலையில் மத்திய அரசு நிதி உதவி வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

உபரிநீர் திட்டம்; அதன்பிறகு, பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேறும் காலங்களில், காலிங்கராயன் அணைக்கு கீழ்பகுதியில், 1.5 டிஎம்சி அளவு தண்ணீர் எடுக்கும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதற்கான திட்ட நிதியையும் மாநில அரசே ஒதுக்கியது.

ஈரோடு காலிங்கராயன் அணைகட்டில் இருந்து 1,065 கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய் வாயிலாக நீரை பம்பிங் செய்து எடுத்துச் சென்று, 1,045 குளம், குட்டைகளைக்கு நீர் நிரப்பும் வகையில் தற்போதைய திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்காக 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள திட்டத்திற்கும் அத்திக்கடவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்ற பழைய பெயரே இந்த திட்டத்திற்கு சூட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x