Published : 16 Aug 2024 08:16 PM
Last Updated : 16 Aug 2024 08:16 PM

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சனிக்கிழமை தொடக்கம்: நனவானது 65 ஆண்டு கால 3 தலைமுறை கனவு!

திருப்பூர்: திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 3 தலைமுறைகளை கடந்த 65 ஆண்டு கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நாளை (ஆக.17) செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தை சனிக்கிழமை சென்னையில் இருந்து துவங்கி வைக்கிறார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக இருந்து வந்தது. இத்திட்டம் ரூ.1916.41 கோடி செலவில், பணிகள் நிறைவுற்று துவங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் முதல் பயன்பெறுகின்றனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறும்போது, “3 தலைமுறைகளின் கனவுத்திட்டம், இன்று நனவாகிறது. விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் போராட்டக்குழுவினர் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளோம். இந்த திட்டம் பல்வேறு போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தியதால் தான், இன்றைக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், கடந்த 10 ஆண்டுகளாக தொடர் தீர்த்த குடயாத்திரை, பாதயாத்திரை, குளம், குட்டை பயன்பெறும் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெயர்ப்பலகை திறப்பு விழா, கடந்த 2001-ம் ஆண்டு, 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில், அத்திக்கடவு திட்டத்தின் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தியது என, தொடர் போராட்டங்கள் மூலம் தான் இன்றைக்கு இந்த திட்டம் சாத்தியப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பிப். 8-ம் தேதி போராட்டக்குழு சார்பில் 12 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரூ. 3.27 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக ஒப்புதல் அளித்து அரசிதழில் வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பிப். 28-ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இந்த திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திட்டப் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்தன. இதையடுத்து கரோனா தொற்று பரவல் காரணமாக, திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவுற்றிருந்தன.

இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, ஓர் ஆண்டுக்கு முன்பே சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டது. ஆனால் காலிங்கராயன் அணைக்கட்டில் உபரி நீர் இல்லாததால், திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ந்து பல மாதங்கள் தாமதம் ஏற்பட்டன. தற்போது உபரி நீர் கிடைத்துள்ளதால், தமிழக அரசு இத்திட்டத்தை இன்று செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறது. இன்றைக்கு 1,400 குளம் மற்றும் குட்டைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்துகிறோம்.இந்த திட்டத்தில் விடுபட்ட குளம் மற்றும் குட்டைகளையும் இணைத்தால், திட்டம் முழுமை அடையும்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x