Published : 16 Aug 2024 01:29 PM
Last Updated : 16 Aug 2024 01:29 PM
புதுச்சேரி: சட்டபூர்வ பரிமாற்ற நாள் விழாவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. கீழூரில் தேசியக்கொடியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஏற்றி தியாகிகளை கவுரவித்தார்.
பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி, இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி புதுச்சேரி இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
அதன் பிறகு, புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை முறைப்படி ஏற்றது. இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற கீழூரில் புதுச்சேரி சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக நினைவுத் தூண், நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டபூர்வ பரிமாற்ற நாள் விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. பேரவைத்தலைவர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று காவல்துறை மரியாதையை ஏற்றனர்.
தொடர்ந்து அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினர். நிகழ்ச்சியில் பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, அமைச்சர் சாய் ஜெ சரவணகுமார் அரசு கொறடா ஆறுமுகம் தலைமைச் செயலர் சரத்சவுகான், ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழில் முதல்வர் ரங்கசாமியின் பெயர் இருந்தும் கடந்த் இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சட்டபூர்வ பரிமாற்ற நாள் விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment