Published : 11 Aug 2014 07:00 PM
Last Updated : 11 Aug 2014 07:00 PM
சேலம் அயோத்தியாப்பட்டிணம் ரயில் நிலையத்தில் விளக்கு வசதியில்லாத பிளாட் ஃபாரத்தில் சமூக விரோதிகளால் மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் அவர்களது உடமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
‘உங்கள் குரல்’ பதிவில், வாசகர்கள் ரயில் நிலையங்களில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள்குறித்து தகவல் தெரிவித்திருந்தனர். அதன்படி, நேரில் விசாரித்ததில் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன...
வெறிச்...
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் இயங்கும் விருதாச்சலம் பயணிகள் ரயில் டவுன் ரயில் நிலையம், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி, வாழப்பாடி, ஏத்தாப்பூர், ஆத்தூர் வழியாக காலை, மாலை வேளைகளில் சென்று வருகிறது. தினமும் இரவு எக்மோர் எக்ஸ்பிரஸ், வாரம் ஒரு முறை பாண்டிச்சேரி மற்றும் நாகூர் பகுதிகளுக்கு ரயில் சென்று வருகிறது.
சேலம் - விருதாச்சலம் ரயில்வே மார்க்கத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் ரயில் போக்குவரத்து இருப்பதால், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சிறிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ரயில் வந்து செல்லும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பிளாட்ஃபாரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை.
மாலை வேளையில் முதியவர்கள் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் வாக்கிங் செல்லும் இடமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுத்தர வயதுடையவர்கள் அலுவலகம் முடித்து வந்து சக நண்பர்களுடன் ரயில்வே ஃபிளாட்பாரங்களில் உள்ள நாற்காலியில் அமர்ந்து பேசி மகிழ்கின்றனர். அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்தில் அலுவலகக் கட்டடம் இருக்கும் இடத்தில் மட்டும் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு செல்லும் ரயில்கள் நிற்கும் பிளாட் ஃபாரங்கள் இருள் சூழ்ந்திருந்தன.
இரவு நேர ரயில்களில் வரும் பயணிகள், அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்தில் இறங்கி, பயந்துகொண்டே வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. தனியாக நடந்து செல்லும் மாணவியர், பெண்களை பிளாட்ஃபாரங்களில் சுற்றித் திரியும் கும்பல், கேலி, கிண்டல் செய்வதும், ரகளையில் ஈடுபடுவதும் நடக்கிறது. சில நேரங்களில் தனியாக வரும்அப்பாவிகளிடம் அடித்து பணம்பிடுங்கி செல்வதையும ்வாடிக்கையாக வைத்துள்ளார்களாம்.
கும்மாளம்
ரயில்வே பிளாட் ஃபாரங்களை விட்டு தண்டவாள பகுதியில், சில சமூக விரோதிகள் அமர்ந்து கஞ்சா, மது குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர். ரயில் பிளாட்ஃபாரத்தில் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காதலர்கள் யாராவது கண்ணில் பட்டு விட்டால், பெண்ணுடன் வரும் இளைஞரை அடித்து துரத்தி விட்டு, பெண்ணிடம் சில்மிஷம் செய்து ரகளை செய்யும் சம்பவங்களும் நடந்துள்ளன.
பெற்றோருக்கு பயந்து காதலர்கள், காவலர்களிடம் இதுபோன்ற பாலியல் வக்கிர தொல்லை குற்றங்களை வெளியே சொல்லாமல் மவுனமாகி விடுகின்றனர்.அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் மட்டுமல்லாமல் விருதாச்சலம் மார்க்கத்தில் உள்ள பல சிறிய ரயில் நிலையங்களில் விளக்கு வசதியில்லாததால், இரவு நேரங்களில் நடக்கும் சமூகவிரோத செயல்களால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
அச்சம் விலகுமா?
ஆத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் கூறியதாவது:
அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் இரவு நேரங்களில் மது அருந்தும் கூடமாக மாறியுள்ளது. விரைவு ரயில் நின்று செல்லும் பிளாட் ஃபாரம் மட்டும் ரயில் வரும்போது விளக்குகள் எரியும். ரயில் சென்றபின்பு, விளக்குகள் அணைந்துவிடும். இதுபோன்ற சிறிய ரயில் நிலையங்களில் விளக்கு வசதி குறைவாக உள்ளதால், பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து தொல்லை கொடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விளக்கு அணைப்பது ஏன்?
சேலம் கோட்ட ரயில்வே துறை மக்கள் தொடர்பு அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:
சிறிய ரயில் நிலையங்களில் முழு நேரம் விளக்கு எரியூட்டுவது என்பது சாத்தியமில்லாதது. ரயில்வே பிளாட் ஃபாரங்களில் ரயில்கள் வந்து நிற்கும்போது மட்டுமே விளக்கு எரியூட்டப்படும். மற்ற நேரங்களில் விளக்கு எரிய வைப்பதால், மின்சார செலவு அதிகமாகும். ரயில் நிலையங்களில் பிளாட் ஃபாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு தான் உள்ளே வர வேண்டும். ஆனால், பொதுமக்கள் வாக்கிங் செல்லவும், பொழுதுபோக்கும் இடமாகவும் மாற்றியுள்ளனர்.
நாங்கள் ஆய்வு செல்லும் போது, கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மது குடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது உள்ளிட்ட புகார்களை ரயில் நிலையத்தில் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், யாரும் புகார் செய்வது கிடையாது. ரயில் நிலையத்தில் புகார் புத்தகம் வைத்து பராமரித்து வருகிறோம்.
வாரம் ஒரு முறை பதிவாகியுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். ரயில் நிலையம், தண்டவாள பகுதியில் அத்துமீறி நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா என ரயில்வே போலீஸார் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர். 24 மணி நேரமும் சிறிய ரயில் நிலையங்களை கண்காணிப்பது சாத்தியமில்லாதது. எனவே, சமூக விரோதிகள் நடமாட்டம் குறித்து, பார்வையிடும் பொதுமக்கள் புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT