Published : 03 Apr 2014 06:15 PM
Last Updated : 03 Apr 2014 06:15 PM
தேசிய அளவிலான கேரம் போட்டியில் தங்கம் வென்ற கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவரை, மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
கோவை செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மகன் இளங்கோவன் (14). கோவை உடையாம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் மார்ச் 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவில், 14 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான கேரம் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். பதக்கம், கோப்பையுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்த இளங்கோவன், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்தார்.
பதக்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கிய காவல் ஆணையர், சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மாணவரின் பெற்றோர், பயிற்றுநர் மா.திருமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
காவல் ஆணையரை சந்தித்த பின்னர் இளங்கோவன் கூறியது:
பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றுள்ளேன். கடந்த 2012-ம் ஆண்டில், தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றேன். ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றுள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடத்தில் உள்ளேன்.
இதனை அறிந்த காவல் ஆணையர், கடந்த பிப்ரவரி மாதம் தானாக நேரில் அழைத்து ரூ. 5 ஆயிரம் அளித்து ஊக்கத்தொகை அளித்து பாராட்டினார்.
அப்போது, என்னுடன் கேரம் விளையாடினார். அவர் அளித்த ஊக்கம் காரணமாகம் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மீண்டும் பதக்கம் வெல்ல முடிந்தது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT