Published : 15 Aug 2024 07:14 PM
Last Updated : 15 Aug 2024 07:14 PM

ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருடன் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால, இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், சுதந்திர தின விழா கொடியேற்றத்துக்குப் பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநருடைய கருத்தியல் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கிற அந்தப் பதவியின் மீதும், அந்தப் பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநருடைய அழைப்பினை ஏற்று தேநீர் விருந்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக, ராஜ்பவனுக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்று அழைத்துச் சென்றார். மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பொன்முடி, எ.வ.வேலு உள்பட தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்க வந்திருந்த அனைவருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, தேமுதிக சார்பில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, ஆளுநரின் தேநீர் விருந்தை, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் புறக்கணித்திருந்தன. இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை கலைவாணர் அரங்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நூறு ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார். இந்தச் சூழலில், ஆளுநர் மாளிகையில் நடந்த சுதந்திர தின விழா தேநீர் விருந்து விழாவில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x