Published : 09 Aug 2014 10:00 AM
Last Updated : 09 Aug 2014 10:00 AM
தமிழகம் முழுவதும் 15 இடங்களில் உள்ள சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 12 ஆயிரம் போலீஸாரின் நிலைமை குறித்து ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரித்தபோது, தங்களுடைய குமுறல்களை அவர்கள் கொட்டித் தீர்த்தனர்.
தமிழகத்தில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் தோன்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தருமபுரி, விழுப்புரம், வேலூர் மற்றும் டெல்லியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவுகள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான போலீஸார் பணியில் உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் உள்ள இடத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் திடீர் கலவரம் ஏற்பட்டால் அங்கு போலீஸார் உடனடியாகச் சென்று தங்கள் உயிரை பணயம் வைத்து நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலத்தை விட்டு வட இந்திய நகரங்களுக்கும் சென்று தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை வீட்டுக்கு செல்வது அபூர்வமாகிவிட்டது என கூறும் இவர்கள், தங்களது வாழ்க்கை நிலைமை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது என ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதிக்கு புகாராக தெரிவித்தனர். பேசிய அனைவரும் தங்களுடைய பணியில் நேரிடும் இடர்பாடுகள் மற்றும் வாழ்க்கை நிலைமை குறித்து வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸாரிடம் ‘தி இந்து’ செய்தியாளர் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:
திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானம் 99 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு டிஐஜி, எஸ்பி ஆகியோரின் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் காவலர் குடியிருப்புகள் உள்ளன. கேம்பில் இருக்கும் சமயங்களில் உயர் போலீஸ் அதிகாரி தொடங்கி இன்ஸ்பெக்டர் வரையிலான பதவிகளில் உள்ளவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டுக்கு காய்கறி வாங்கி வருவது, வேலை இல்லாத நேரங்களில் புற்களை பிடுங்கி எறிவது என பணியாற்றி வருகிறோம். இதற்காகவே ஒவ்வொரு காவலரும் கடப்பாறை, மண்வெட்டி என சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறோம். எங்களது பணிச்சுமையைப் பார்த்து மற்ற பிரிவு போலீஸார் எங்களை அண்டா போலீஸ், மண்ணு போலீஸ் என்று கிண்டல் செய்கின்றனர். இத்தனை சோதனைகளையும் தாங்கிக்கொண்டுதான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
எங்களில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பு தொடங்கி எம்பில் வரை படித்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய மாத சம்பளம் பிடித்தம் போக ரூ.11 ஆயிரம் மட்டுமே.
வழக்கமாக, சிறப்பு காவல் படையில் பணியாற்றிய 3 மாதங்களிலிருந்து ஓராண்டுக்குள் அந்தந்த மாவட்ட ஆயுதப் படைக்கு பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். அதன்பிறகு, ஏதாவது போலீஸ் நிலையத்துக்கு பணி அமர்த்தப்படுவர். ஆனால், நாங்கள் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணியில் சேர்ந்தோம். அன்று முதல் இதுநாள் வரையிலும் ஆயுதப் படைக்கு நாங்கள் மாற்றப்படாமல் நிரந்த அடிமை போலவே நடத்தப்படுகிறோம். எங்களுக்கு பிறகு, 2013-ம் ஆண்டு ஆயுதப் படைக்கு நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். எங்களை ஆயுதப் படைக்கு மாற்றிவிட்டு, புதிதாக பணி நியமனம் பெற்றவர்களை நாங்கள் இருக்கும் சிறப்பு காவல் படைக்கு அனுப்ப வேண்டும் என்பதே நடை முறை.
ஆனால், உயர் அதிகாரிகள் தங்களுடைய சுயலாபத்துக்காக தமிழக அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்லாமல் தங்களின் அடிமைகளாக எங்களை வைத்துள்ளனர்.கடந்த 1999, 2000-ம் ஆண்டுகளில் சிறப்பு காவல் படையில் சேர்ந்த சிலர் இன்னமும் பணி மாறுதல் பெறாமல் இதுதான் வாழ்க்கை என நடைபிணமாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த புதன்கிழமை காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர், ‘காவல் துறையில் 16623 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதில் 14633 பணி இடங்கள் ஆயுதபடை போலீஸாராகவும், 186 பணியிடங்கள் சிறப்பு காவல் படை போலீஸாராகவும் நிரப்பப்படும்’ என அறிவித்துள்ளார்.
அப்படி என்றால் தற்போது பணியில் உள்ள நாங்கள் நிரந்தர அடிமைகளாக இங்கேயே இருக்க வேண்டுமா..? எங்களை ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டு புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளவர்களை குறிப்பிட்ட காலம் சிறப்பு காவல் படையில் பணியாற்ற அனுமதித்து அடுத்து காலி பணியிடம் நிரப்பும்போது அவர்களை ஆயுதபடைக்கு மாற்ற அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
விரக்தியில் தற்கொலை முயற்சி:
கோவை பட்டாலியனில் சிறப்பு காவல் படையில் பணியாற்றிவரும் ராஜேஷ் என்ற காவலர் தனக்கு இனி மாறுதல் கிடைக்காதோ என்ற விரக்தியிலும் மனஅழுத்தம் காரணமாகவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பு காவல் படையில் தொடர்ந்து பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT