Published : 14 Aug 2024 08:03 PM
Last Updated : 14 Aug 2024 08:03 PM
மதுரை: “தமிழகத்தில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்,” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். மேலும், “தலித் என்ற வார்த்தையைப் பேச எம்பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோருக்கு தகுதியில்லை” என்று அவர் கூறினார்.
இது குறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் 19 சதவீத இடஒதுக்கீடு 50 ஆண்டாக நடைமுறையில் உள்ளது. 2008-ல் இதிலிருந்து பிரித்து அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறபிக்கப்பட்டது. அப்போது, நாங்கள் எதிர்த்தோம். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-1 உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளில் அதிகளவில் பட்டியலின மக்களுக்கான வாய்ப்பில்லை. 18 சதவீதம் உதவியாளர் உள்ளிட்ட கடை நிலை ஊழியர்களுக்கான ஒதுக்கீடாகவே இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன்.
இதன்பின், அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் ஆய்வின் மூலம் மூன்றரை லட்சம் காலி பணி யிடங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்காதது தெரிந்தது. தொடர்ந்து நாங்கள் எடுத்த முயற்சியால் 2004 நிலவரப்படி அரசு கல்லூரிகளில் மட்டும் 1200-க்கும் மேற் பட்டோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2008-ல் அருந்ததியருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீடு குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பின்னடைவு காலியிடங்களை நிரப்பிய பிறகு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஆனாலும், திமுக ஆட்சியை தக்க வைக்க கூட்டணி கட்சிகளின் அழுத்ததால் 3 சதவீத உள் ஒதுக்கீடு வந்தது. ஜெயலலிதா உள் ஒதுக்கீடு முறையை எதிர்த்தார். இதுபற்றி தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவிக்கிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசுகிறார். தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் இருக்கும் பட்டியலின மக்களுக்கான உரிமை தொடர்ந்து 14 ஆண்டாக பறிக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும். கடந்த 75 ஆண்டில் அரசு துறை வாரியாக எவ்வளவு சதவீதம் பட்டியல் மக்களுக்கு ஒதுக்கீடு மூலம் பயன் பெற்றுள்ளனர். புள்ளி விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும்.
பட்டியல் மக்கள் முன்னேற்றத்துக்காக அவர்களின் ஒதுக்கீட்டில் இருந்து பறித்து கொடுப்பது நியாயமல்ல. பிசி, எம்பிசி, ஓசி பிரிவில் இருந்து பறித்து 3 சதவீத உள்ஒதுக்கீடு கொடுக்க முடியுமா? உள்ஒதுக்கீடுக்கு அன்றைக்கு குரல் கொடுக்காமல் இருந்த வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சில அமைப்புகளும் தற்போது குரல் எழுப்புகின்றன. மாயாவதி போன்ற வடமாநில தலைவர்களும் குரல் கொடுக்கின்றனர். உள்ஒதுக்கீடு முறையை அரசு மறுபரிசீ லனை செய்ய வேண்டும். இது தொடர்பாக இம்மாதம் இறுதியில் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்.
தலித் என்ற வார்த்தையைப் பேச எம்பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோருக்கு தகுதியில்லை. அவர்கள் உள்ஒதுக்கீடுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. எம்பி, எம்எல்ஏ பதவி ஆசைக்காக ஓடுகின்றனர். அவர்கள் சார்ந்த மக்களுக்காக பதவியை அர்ப்பணிக்கவில்லை. அவர்களது கடமையை சரியாக செய்ய வேண்டும்.
மாஞ்சோலை பிரச்சினையில் எதிர் தரப்பினர் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கின்றனர். அவர்களை வாய்தா வாங்க விடமாட்டோம். அழுத்தம் கொடுத்து நியாயம் கிடைக்கச் செய்வோம். வழக்கில் வெற்றி பெறுவோம். இதற்காக நானே நேரில் ஆஜராகிறேன்” என்று அவர் கூறினார். மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். | வாசிக்க > “தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது!” - திருமாவளவன் பேசியது என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT