Published : 14 Aug 2024 06:10 PM
Last Updated : 14 Aug 2024 06:10 PM

தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி: பாஜகவுக்கு அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆனபிறகும் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்ள பாஜகவுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தேசியக் கொடியுடன் இரு சக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவை காவல் துறை நிராகரித்துள்ளதாகக் கூறி கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “பாஜகவின் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்ததில் எந்த அரசியல் காரணமும் இல்லை.

தேசியக் கொடியின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். தேசியக் கொடி விதிகளின்படி, தேசியக் கொடி தரையில் படவோ, சேதம் ஏற்படவோ கூடாது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்களின் வாகனங்களில் மட்டுமே தேசியக்கொடி பறக்க அனுமதிக்க முடியும். வேறு வாகனங்களில் தேசியக்கொடி பறக்க அனுமதி கிடையாது. தேசியக் கொடியுடன் பேரணி செல்ல காங்கிரஸ் கட்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

200 வாகனங்களில் தேசியக் கொடியுடன் பேரணி செல்வோர் முறையாக ஒழுங்கை பின்பற்றுவர் எனக்கூற முடியாது. மேலும், இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடியை ஏந்திச் செல்வது என்பது விதிகளுக்கு புறம்பானது. பேரணியில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் வாகன விதிகளையும் மீறக்கூடும். அதேநேரம் சுதந்திர தினத்தை வீடுகளின் மேலே கொடியேற்றி, அறப்பணிகள் செய்து கொண்டாடலாம்” என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ், “வாகனங்களில் தேசியக் கொடியை கொண்டு செல்ல எந்த விதியும் தடை செய்யவில்லை. பேரணியின்போது இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் தான் தேசியக் கொடியை ஏந்திச் செல்வார். எந்த கோஷமும் எழுப்பப்பட மாட்டாது. அதேபோல தேசியக் கொடிக்கு எந்தவிதமான அவமதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வோம்.தேசியக் கொடியை ஏந்திச் செல்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை. தமிழகத்தில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனப் பேரணிக்கு மட்டுமின்றி தேசியக்கொடியுடன் நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், “சுதந்திரப் போராட்டத்துக்காக தேசியக் கொடியேந்தி உயிர்த்தியாகம் செய்த திருப்பூர் குமரன் வாழ்ந்த தமிழகத்தில் தான் நாமும் வசிக்கிறோம். நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆனபிறகும் தேசியக் கொடியுடன் இருசக்ககர வாகனப் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பதற்கு எந்தக் காரணமும் கிடையாது. எனவே, தேசியக் கொடியுடன் பாஜக வாகனப் பேரணி மேற்கொள்ள போலீஸார் நிபந்தனையுடன் அனுமதி வழங்க வேண்டும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனங்களிலோ, சைக்கிளிலோ அல்லது நடந்தோ பேரணி செல்வதை யாரும் தடுக்கக் கூடாது. தேசியக் கொடியை அதற்கான மரியாதையுடன், கண்ணியமாக கொண்டு செல்ல வேண்டும். எந்தவொரு அவமரியாதையும் செய்யக் கூடாது. பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பேரணியில் பங்கேற்பவர்களின் விவரம், வழித்தடம் போன்ற விவரங்களை பேரணி ஏற்பாட்டாளர்கள் போலீஸாருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்துக்கு மட்டுமே பொருந்தும். கட்சிக் கொடியேந்தி செல்லக் கூடாது’ என நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x