Published : 14 Aug 2024 06:57 PM
Last Updated : 14 Aug 2024 06:57 PM
குரோம்பேட்டை: நெடுஞ்சாலை துறையினர் அக்கறையின்றி செயல்படுவதாக அமைச்சர் முன்னிலையில் எம்எல்ஏ-க்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பருவமழை - 2024 எதிர்கொள்ளவும், மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ள தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், அமைச்சர் அன்பரசன், எம்எல்ஏ-க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நீர்வளத்துறையினர் கூறும் போது, ''செம்மஞ்சேரியில், 6 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால் அங்கு வெள்ளப் பாதிப்பு குறைந்துள்ளது. இரும்புலியூர், பீர்க்கன்கரணை ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் ரூ. 96.5 கோடி செலவில் மூடுகால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு, ஜி.எஸ்.டி., சாலை வரை இப்பணி முடிக்கப்படும். எஞ்சிய பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். ரோஜா தோட்டம் அருகில் சில பிரச்சினைகளால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 ஏரிகளை ரூ.3.15 கோடி செலவில் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது'' என்றனர்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் பேசுகையில், ''கடந்த மழையின் போது, தாம்பரம் மாநகராட்சியில், 4-வது மண்டல பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. இந்தாண்டு பாதிப்பை தடுக்க, ஐந்து மண்டலங்களிலும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாப்பான் கால்வாயை துார்வாருதல் உள்பட 4-வது மண்டலத்திற்கு மட்டும் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.1.25 கோடி செலவில் சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.5 கோடி செலவில் கால்வாய்களை துார்வாரும் பணி நடந்து வருகிறது. சாலை ஒட்டுப் பணியும் நடந்து வருகிறது. இப்பணிகள், செப்.,15-க்குள் முடிந்துவிடும். மரக்கிளைகளை வெட்டி அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
''பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில் வலதுபுறம் கால்வாய் பணி முடிந்துவிட்டது. இடதுபுறம் 200 மீட்டர் மட்டுமே உள்ளது. 2 மாதங்களில் அப்பணியும் முடிக்கப்படும்'' என நெடுஞ்சாலைத் துறையினர் கூறினர்.
அப்போது குறுக்கிட்ட தாம்பரம் எம்எல்ஏ-வான ராஜா, ''இப்படி திரையில் போட்டு காட்டுவதால் எந்தப் பலனும் இல்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே, தாம்பரத்தில் வெள்ளப் பாதிப்பை தடுக்க முடியும். ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூறினால், அவர்கள் அதைவிட்டு மற்ற வேலைகளை தான் பார்க்கிறார்கள். நெடுஞ்சாலைத் துறையினர் மனிதாபிமானத்தோடு பணியாற்ற வேண்டும்'' என்றார்.
பல்லாவரம்– துரைப்பாக்கம் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் பள்ளம் தோண்டும் போது, பாதாளச் சாக்கடை குழாயை உடைத்து நாசப்படுத்தி விட்டனர். இதன் காரணமாகவே, 2-வது மண்டலத்தில் பாதாளச் சாக்கடை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத் துறை இழப்பீடும் வழங்கவில்லை. ஐந்து ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் கட்டுகின்றனர். சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம். நெடுஞ்சாலைத் துறையினருக்கு மக்கள் மீது அக்கறையே இல்லை என்று பல்லாவரம் எம்எல்ஏ-வான இ.கருணாநிதி குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, ''பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில், கால்வாய் பணியை 2 மாதங்களில் முடித்துவிடுவோம் என கடமைக்காக கூறக்கூடாது. பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டத்தில் கூறிய கருத்துக்களை குறிப்பெடுத்து, தேவையான பணிகளை செய்து, பருவ மழையை எதிர்கொள்ள ஒவ்வொரு துறையும் தயாராக வேண்டும். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் சரிசெய்ய போதிய ஊழியர்கள், உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும்'' என செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ''மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளின் மதகு, கால்வாய் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். திருக்கழுக்குன்றம், லத்தூர், மதுராந்தகம் பகுதிகளில் விவசாயிகள் அதிகம் உள்ளனர். அந்த ஏரிகளில் தண்ணீர் தேங்காமல் வீணாகிறது. தேவையான பணிகளை செய்து, தண்ணீரை தேக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெள்ளம் தேங்காமல் தடுக்க போதிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை முறையாக உள்ளதா, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டிடடங்கள் உள்ளதா என ஆய்வு செய்து ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பொழிச்சலூர் பகுதியில், விடுப்பட்டுள்ள கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
முன்னதாக நீர்வளத்துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை, மாநகராட்சி சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை அமைச்சர், ஆட்சியர், எம்எல்ஏ-க்கள் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT