Published : 14 Aug 2024 05:56 PM
Last Updated : 14 Aug 2024 05:56 PM
மதுரை: ‘‘தமிழகத்துக்காக மத்திய அரசிடம் வாதாடி, போராடி நிதியைப் பெற்றுத் தராத அண்ணாமலை, முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். முதலில் அவர் வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று பொதுச் சேவை செய்யட்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தானில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறுப்பினர் அட்டைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசியது: “தமிழகத்தில் பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி ஆட்சி என்று அண்ணாமலை பேசுகிறார். அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி 50 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். எதையும் அறிவுசார்ந்து, நூறு தடவை யோசித்துத்தான் பேசுவார். அண்ணாமலைக்கு ஆட்சி, அரசியல், வரலாற்றைப் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது? இதே அண்ணாமலை தான் அதிமுக இருக்கக் கூடாது என்று சொன்னார். இவர் தாத்தா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் அண்ணாமலை பேசுகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்துக்காக மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. ஆனால், அதிமுக ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்கும்போதும் மக்கள் சேவை செய்வதில் நாங்கள் பின்வாங்குவதில்லை. தமிழகத்துக்காக வாதாடி, போராடி நிதியைப் பெற்றுத் தராத அண்ணாமலை, முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அது பகல் கனவு. முதலில் அவர் வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று பொதுச்சேவை செய்து, அதன் பின்பு சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்றி கஷ்ட நஷ்டம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதிமுகவுக்கு மதிப்பெண் கொடுக்க நீங்கள் யார்? அண்ணாமலை ஐபிஎஸ் படித்த மேதாவியாக இருக்கலாம். அவருக்குத் தமிழகத்துக்கு ஒரு பைசாகூட நிதி பெற்றுத்தர அருகதை இல்லை. ஆனால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அதிமுக பற்றிப் பேச இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?
மாநில தலைவராக உள்ள நீங்கள், டெல்லியில் சென்று முற்றுகையிட்டு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி வாங்கி வந்தீர்களா? வளர்ச்சி நிதி வாங்கிவந்தீங்களா? வறட்சி நிதி வாங்கி வந்தீர்களா? எட்டு முறை தமிழகத்திற்குப் பாரதப் பிரதமரை அழைத்து வந்த நீங்கள் கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்த போதும், பேரிடர் காலத்திலும் அவரைக் கூட்டி வந்தீர்களா? இது எதுவும் அண்ணாமலை செய்யவில்லை” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT