Published : 14 Aug 2024 04:46 PM
Last Updated : 14 Aug 2024 04:46 PM

மதுரை மேயர், ஆணையர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க 3 பெரிய ‘கேட்’டுகள்!

மதுரை மாநகராட்சி மேயர், ஆணையர் அலுலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள இரும்பு கேட்

மதுரை: ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள், மேயர், ஆணையர் அலுவலகத்துக்குள் நுழையாமல் இருப்பதற்கு, இரு அலுவலகங்களையும் போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க, மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மூன்று பிரம்மாண்ட இரும்பு ‘கேட்’கள் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக மதுரை உள்ளது. இங்குள்ள 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மாநகராட்சி அலுவலகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இங்கு பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு அடிக்கடி பெரும் திரளாக வந்து, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற வைக்கிறார்கள். அல்லது கலைந்து போகச் செய்கிறார்கள்.

அதிகாரிகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியடையும்போது, போராட்டக்காரர்கள் திடீரென்று மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து, முதல் தளத்தில் உள்ள மேயர், ஆணையர் அறை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மேலும், அவர்கள் அறைகள் முன்பாக உள்ள வராண்டாவில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்திலும் ஈடுபடுகிறார்கள்.

மேயர், ஆணையர் வந்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே அவர்கள் கலைந்து செல்கிறார்கள். இதனால், அலுவலக பணிகள் பாதிக்கப்படுகிறது.இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள், திடீரென்று மேயர், ஆணையர் அலுவலகத்தில் நுழைவதை தடுக்க, மாநகராட்சி மேயர், ஆணையாளர் அலுவலகத்தை சுற்றிலும், மூன்று பிரம்மாண்ட இரும்பு ‘கேட்’ போடப்பட்டுள்ளது.

இந்த ‘கேட்’களை தாண்டித்தான் போராட்டக்காரர்கள் மேயர், ஆணையர் அலுவலகத்துக்குள் வரமுடியும். மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் நுழைவதற்கு ஏற்கெனவே நான்கு பிரம்மாண்ட நுழைவு வாயில் ‘கேட்’டுகள் உள்ளன. இந்த ‘கேட்’டுகள், கே.கே.நகர் - தமுக்கம் முக்கிய சாலையில் அமைந்துள்ளன. நாள் முழுவதும் போக்குவரத்து பரபரப்பான இந்த சாலையில் உள்ள இந்த ‘கேட்’டுகளில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் சாலையில் போக்குரவத்து பாதிக்கப்படும். அதனால், மாநகராட்சி நிர்வாகம், அலுவலக வளாகத்தில் பொதுமக்கள், ஊழியர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கும்.

ஆனால், தற்போது இவர்கள் வளாகத்தில் இருந்து மேயர், ஆணையர் அலுவலகத்துக்குள் செல்லாமல் இருப்பதற்காக, அவர்கள் அலுவலகங்களை பாதுகாக்க இரண்டாவது அடுக்கு நுழைவு வாயில்களாக புதிதாக இந்த மூன்று ‘கேட்’கள் அமைக்கப்பட்டுள்ளன. போராட்டம் நடக்கும்போது, இனி முன்னெச்சரிக்கையாக இந்த இரண்டாவது அடுக்கு புதிய மூன்று ‘கேட்’களும் இழுத்துப்பூட்டப்படும் எனவும், அதற்காகவே இந்த ‘கேட்’கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x