Published : 14 Aug 2024 01:10 PM
Last Updated : 14 Aug 2024 01:10 PM

அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையருக்கு எதிராக போலி புகார்: முன்னாள் செயல் அலுவலர் கைது 

மதுரை: இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையருக்கு எதிராக போலி புகார் அளித்த முன்னாள் செயல் அலுவலரை போலீஸார் இன்று (ஆக.14) கைது செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்தவர் செல்லத்துரை. தற்போது இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையராக உள்ளார். இவருக்கு எதிராக மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் இந்து அறநிலையத் துறையின் செயல் அலுவலர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கொடுத்ததாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது.

இது தொடர்பாக, செல்லத்துரை தமக்கு கீழுள்ள அலுவலங்களில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் பெயரையும், போலியான கையெழுத்திட்டு, தன் மீது போலி புகார் மனுவை பரப்பும் ஸ்ரீவல்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் முன்னாள் செயல் அலுவலர் ஜவஹர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அந்தப் புகாரில், 'ஜவஹர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார்கள் வந்தன. இதனால், ஜூலை 31-ம் தேதி பணி ஓய்வு பெறவேண்டிய ஜவஹர் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்ததால் ஓய்வுபெற முடியவில்லை. பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதற்காக என் மீது பாலியல் ரீதியான புகாரை ஜூலை 31-ம் தேதி வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டியிருந்தார்.

மேலும், மண்டல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் 21 பெண் அலுவலர்களின் பெயர்களுடன் அவர்களது கையெழுத்தையும் போலியாக பதிவிட்டு புகார் மனுவை தயார் செய்தும் வெளியிட்டார். இந்தப் புகார் நகல் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டது. அரசு ஊழியரான தன்னையும், பிற பெண் அலுவலர்களையும் பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன் ஆபாசமான வார்த்தையால் பிறர் அருவருக்கும் வகையில் பதிவு செய்து உள்ளார்.

போலி புகார் ஆவணத்தை தயார் செய்து அதில் மோசடியாக பெண் அலுவலர்களின் கையெழுத்தை போட்டு தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்துள்ளார். இச்செயல் துறையின் பெண் ஊழியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் இதன்மூலம் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜவஹர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் துறையின் பெண் ஊழியர்களை பற்றி சமூக ஊடகங்களிலும் பரப்பியுள்ளார். எனவே, அவர் மீது இதுதொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அறநிலையத் துறை இணை ஆணையர் செல்லத்துரையின் இந்த புகாரின் பேரில், முன்னாள் செயல் அலுவலர் ஜவஹர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை இன்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x