Published : 14 Aug 2024 12:41 PM
Last Updated : 14 Aug 2024 12:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்து தேவை என மத்திய அரசை வலியுறுத்தும் தனிநபர் தீர்மானங்கள் அரசு தீர்மானமாக இன்று (புதன்கிழமை) பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க் கட்சித்தலைவர் சிவா, திமுக எம்எல்ஏ-க்கள் நாஜிம், செந்தில்குமார், அரசுக்கு ஆதரவான சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு ஆகியோர் தனி உறுப்பினர் தீர்மானங்களை பேரவையில் இன்று கொண்டு வந்தனர்.
அதன்பின்பு நடந்த விவாதம் வருமாறு: எதிர்க்கட்சித் தலைவர் சிவா: வாங்கிய கடனுக்காக நாளொன்றுக்கு ரூ. 2.7 கோடியை வட்டியாக கட்டுகிறோம். இதை போக்க புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை. நம்மை கேட்காமல் பல திட்டங்களை செய்கின்றனர். மக்கள் தொகை, வரையறுக்கப்பட்ட எல்லை, நிர்வாகம் செய்யும் அரசு ஆகியவை நம்மிடம் உள்ளது. முதல்வர் இம்முறை புதுச்சேரி மக்களின் குரலாக இதை அரசு தீர்மானமாக நிறைவேற்றி டெல்லி எடுத்துச் சென்று தரவேண்டும்.
நாஜிம் (நாஜிம்): தீர்மானம் நிறைவேற்றினாலும் இங்கிருந்து செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பதில் இருக்காது. தீர்மானத்தை அனுப்பாமல் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அனைவரும் சென்று டெல்லியில் தரவேண்டும். முதல்வர் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். எங்களைவிட அவருக்கு வலி அதிகம். யார் ஆண்டாலும் அதிகாரம் தேவை. இம்முறை முடிவு ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும்.
செந்தில்குமார் (திமுக): அதிகாரத்தை தர மறுத்து யூனியன் பிரதேசமாகவே நீடிக்கிறது. செலவின பற்றாக்குறையை மத்திய அரசு தந்தது. வருவாய் பற்றாக்குறையைப் போக்க இன்றும் கொடை தரப்படுகிறது. மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு மாநில பதில்கூட தராத நிலையில் நாம் உள்ளோம்.
பேரவைத்தலைவர் செல்வம்: தனிக்கணக்கு தொடங்க அப்போதைய முதல்வர் ரங்கசாமிக்கு கடும் அழுத்தம் தரப்பட்டது. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். தனி கணக்கு தொடங்காவிட்டால் நிதி கிடைக்காது என்றார். ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோர் இணைந்து புதுச்சேரியை செயல் இழக்க செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டனர். பல திட்டங்களை தடுத்து புதுச்சேரியை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டனர்.
தீர்மானங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கே செல்லவில்லை. கடந்த முறைதான் டெல்லி சென்றது. நமச்சிவாயம்- சென்ற முறை என்றால் எந்த ஆட்சி இருந்தது. அரசியல் பேச இடம் இல்லை. மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாஜிம்; அடுத்தமுறை மாநில அந்தஸ்து பெற்ற சபையில்தான் முதல்வர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவேண்டும். பேரவைத்தலைவர்- இதை அரசியலாக்க வேண்டாம். மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை தேவை. நேரு (சுயேச்சை ): சட்டப்பேரவை கட்டவே அனுமதி கிடைக்கவில்லை.
சிறிய மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து தந்துவிட்டு நம்மை மட்டும் இந்திய தலைநகரான டெல்லியை காரணம் காட்டுகின்றனர். மக்கள் அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி டெல்லி சென்று மாநில அந்தஸ்தை பெறவேண்டும். பிரெஞ்சு ஒப்பந்தத்தை மறுபரீலனை செய்யவேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்; அதை பெற்றே தீர வேண்டும். இது தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை டெல்லிக்கே சென்று நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் வைப்போம். மாநில அந்தஸ்தை பெற்றே தீருவோம். அதற்காக இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து தனி உறுப்பினர்கள் தீர்மானத்தை திரும்பப் பெற்றனர். தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அதன்விவரம்: புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் உள்துறையால் ஆளும் பகுதியாக தொடர்கிறது. கோவா, சண்டிகர் தனி மாநிலங்களாகிவிட்டன. புதுச்சேரிக்கும் தனி மாநில அந்தஸ்து கோரி பலமுறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்தவிதத்தில், மாநில அந்தஸ்து கோரிக்கை 1970-ல் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் மத்திய அரசு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இச்சட்டப்பேரவை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்தார். இந்தத் தீர்மானம் பேரவையில் 15-வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT