Published : 14 Aug 2024 05:46 AM
Last Updated : 14 Aug 2024 05:46 AM

கோவையில் விமான சாகச நிகழ்ச்சியுடன் பன்னாட்டு விமானப் படை பயிற்சி நிறைவு

கோவை சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற ‘தாரங் சக்தி' பன்னாட்டு விமானப் படை கூட்டுப் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், இந்திய விமானப் படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மனி நாட்டு விமானப் படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் உள்ளிட்டோர்.

கோவை: கோவை சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற ‘தாரங்சக்தி 2024' பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

கோவை சூலூர் விமானப் படைத் தளத்தில் கடந்த 8 நாட்களாக 'தாரங் சக்தி 2024' என்ற பன்னாட்டு விமானப் படை கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. இதில், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விமானப் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர். இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்திய விமானப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற சாகசநிகழ்ச்சியில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் தேஜஸ், சுகோய், மிக் போர் விமானங்களில் வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். மேலும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டைபூன் ரக போர் விமானம் மற்றும் ரபேல்போர் விமானங்களும் பங்கேற்றன. கூட்டு விமானப் பயிற்சியில் பங்கேற்ற விமானப் படை தளபதிகளுக்கு நினைவுப் பரிசுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

முன்னதாக, விமானப் படை தள வளாகத்தில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை ஆளுநர்தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். இங்கு அமைக்கப்பட்டுள்ள 62 அரங்குகளில், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிநவீன தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x