Published : 14 Aug 2024 05:57 AM
Last Updated : 14 Aug 2024 05:57 AM

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நடப்பாண்டில் சம்பா நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு

தஞ்சை மாவட்டம் நெய்வாசல் பகுதியில் டிராக்டர் மூலம் வயலை உழுது, சம்பா நடவுக்கு தயார் செய்யும் விவசாயிகள். படம் : ஆர்.வெங்கடேஷ்

திருச்சி: காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்கள் பகுதியாகவும் காவிரிப் பாசனம் பெறுகின்றன. இந்த மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடிக்காக மேட்டூர்அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.

நடப்பாண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படவில்லை. இதனால் வடிமுனைக் குழாய் வசதியுள்ள இடங்களில் மட்டும் ஏறத்தாழ 50 சதவீத அளவுக்கே குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், டெல்டா பாசனத்துக்காக ஜூலை 28-ம் தேதி அணை திறக்கப்பட்டது.

சம்பா பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 14லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடிநெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். தற்போது மேட்டூர் அணை நிறைந்து இருப்பதால் வழக்கத்தைவிட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அதிகமாக சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்கின்றனர் வேளாண்மைத் துறையினர்.

டெல்டா மாவட்டங்களில் சம்பாநெல் சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் தொடங்கிஉள்ளனர். அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு நிலத்தை உழுது, நடவுக்குத் தயார்படுத்தும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். சம்பா பருவத்தைப் பொறுத்தவரை நீண்ட மற்றும் மத்திய கால நெல்ரகங்களான சிஆர் 1009, ஆடுதுறை 51, ஆடுதுறை 39 உள்ளிட்டவைகளை விவசாயிகள் தேர்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சக்திவேல் `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, “நடப்பாண்டில் மேட்டூர் அணை நிரம்பிஇருப்பதால், கூடுதலான பரப்பில்சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது. நீண்டகால விதை ரகங்களைத் தேர்வு செய்யும் விவசாயிகள், செப்டம்பர் முதல் வாரத்தில் நாற்றங்கால்களை விடத் தொடங்குவர். செப்டம்பர் இறுதி மற்றும் அக்டோபர் மாதங்களில் முழுவீச்சில்நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

சம்பா பருவத்தில் அதிக அளவில் சாகுபடி செய்ய ஏதுவாக,பயிர்க் கடன், தரமான விதை மற்றும் உரங்கள் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்என்று விவசாயிகள் வலியுறுத்திஉள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x