Published : 04 Aug 2014 10:50 AM
Last Updated : 04 Aug 2014 10:50 AM

தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு: ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

காவிரி டெல்டா பகுதிகளில் ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.

மக்களை வாழ வைக்கும் காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆறுகளில் தண்ணீர் வந்து சேராததால் தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் மக்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.

வழக்கமாக, தஞ்சை பெரிய கோயில் புது ஆற்றுப் படித்துறை, வடவாற்று படித்துறை, வெண் ணாற்றுப் படித்துறை, திருவை யாறு புஷ்ப மண்டப படித்துறை, சுவாமிமலை காவிரி படித்துறை, கும்பகோணம் பாலக் கரை காவிரி படித்துறை, மகாமகக் குளம், மயிலாடுதுறை காவிரி துலா கட்ட படித்துறை ஆகியவற்றில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி, மேட்டூர் அணையி லிருந்து ஜூலை 27-ம் தேதி திறக்கப் பட்ட தண்ணீர் கல்லணைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த டைந்தது. பின்னர், அங்கிருந்து காவிரியில் கூடுதலாகவும், வெண் ணாற்றில் குறைந்த அளவிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை காலை திருக்காட்டுப் பள்ளி வரையே வந்தது. அதற்குப் பிறகு உள்ள பகுதிகளை தண்ணீர் எட்டவில்லை. மிக உற்சாகமாக ஆடிப்பெருக்கு விழா கொண் டாடப்படும் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறைக்கு தண்ணீர் வராததால், அங்கு அதிகாலையிலிருந்தே குவிந்த புதுமணத் தம்பதிகள் மற்றும் பெண்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து, படித் துறையிலும், ஆற்றின் மணல் பரப்பிலும் பழங்கள் உள்ளிட்ட வற்றை காவிரித் தாய்க்குப் படையலிட்டு, வழிபாடு நடத் தினர். வழக்கமாக ஆற்றில் விடும் திருமண மாலைகளை, அங்கேயே விட்டு விட்டு, ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய்க் கிணற்றில் குளித்து விட்டுச் சென்றனர்.

சங்க இலக்கியமான பிள்ளைத் தமிழில் கூறப்பட்ட “சிறு தேர் உருட்டல்” என்ற வரிகளை நினைவுபடுத்தும் வகையில், அங்கு ரூ.150-க்கு விற்கப்பட்ட சிறு தேர்களை சிறுவர்கள் வாங்கி, உருட்டி மகிழ்ந்தனர். படித்துறையில் வீசப்படும் காசுகளை மூழ்கிச் சேகரிக்கும் சிறுவர்கள், தண்ணீர் இல்லாததால் குழுக்களாக தெருக்களில் சிறு தேர்களை உருட்டிச் சென்று, உண்டியல்களில் காசுகளைச் சேகரித்தனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், அப் பகுதி மக்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கைக் கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x