Published : 13 Aug 2024 09:46 PM
Last Updated : 13 Aug 2024 09:46 PM
காரைக்குடி: “சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு” என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதானி குழுமம் வரம்புக்கு மீறிய பங்குகளை வாங்கியுள்ளது. அதன்மூலம் பங்குகளின் விலையை கூட்டி காட்டியுள்ளது என்று கடந்த முறை ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வரம்புக்கு மீறி அதானி பங்குகளை வாங்கியவர்களை கண்டறிய முடியவில்லை என செபி தெரிவித்தது. இதனால் உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
ஆனால், அந்த பங்குகளில் கடந்த 2015-ம் ஆண்டு செபித் தலைவர் மதாபி புச், அவரது கணவர் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்ததில் தவறில்லை. ஆனால் முதலீடு செய்தவர்களை தெரியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் செபி சொன்னது பொய் என தெளிவாகியுள்ளது. இனி செபி மீண்டும் விசாரிக்க முடியாது. செபி தலைவர், அதானி இருவருக்கும் இடையே உள்ள தொடர்பை கூட்டு நாடாளுமன்றக் குழு தான் விசாரிக்க வேண்டும். அதுவரை செபி தலைவர் பதவி விலக வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கும். இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு எப்போதும் தமிழக காங்கிரஸ் ஒத்துழைக்கும்.
பாஜக என்பது விஷம். அதனுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அழிந்துவிடும். இந்த உண்மையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புரிந்து கொண்டுள்ளார். பொய்யான கருத்துக்களை கூறுபவர் தான் சவுக்கு சங்கர். அதில் மாற்று கருத்தில்லை. அவர் மீது மற்ற பிரிவுகளில் தான் வழக்கு பதிய வேண்டும். குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வது பொருத்தமாக இருக்காது.
அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்குவதற்கும், பதவி உயர்வு கொடுப்பதற்கும் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. விஜய் கட்சி தொடங்கியதால் அரசியல் பயணம் தொடங்காது. ஒவ்வொரு விஷயத்திலும் தனது நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் தான் அவரது அரசியல் பயணம் தொடங்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT