Published : 13 Aug 2024 08:18 PM
Last Updated : 13 Aug 2024 08:18 PM

ஓணம், தீபாவளிக்கு சுற்றுச்சூழல் விதிகளில் விலக்கு அளிக்க பரிசீலனை: சிவகாசியில் சுரேஷ் கோபி தகவல்

சிவகாசி அருகே கீழதிருத்தங்கல்லில் உள்ள சோனி விநாயகா பட்டாசு ஆலையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு செய்தார்.

சிவகாசி: “தீபாவளி, ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சுற்றுசூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்,” என சிவகாசியில் பெட்ரொலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

சிவகாசி தனியார் ஹோட்டலில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உடன் பட்டாசு பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம் இன்று (ஆக.13) நடைபெற்றது. இதில், மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ்கோபி கலந்துகொண்டு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில், பட்டாசு உற்பத்தியாளங்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறியதாவது: “பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்பாடு மற்றும் சரவெடி தயாரிக்க அனுமதிக்க வேண்டும்.

இடி, மின்னல் காரணமாக பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும் போது உரிமம் ரத்து செய்யப்படுகிறது. உரிமம் புதுப்பிக்க காலதாமதம் ஆவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. விபத்து ஏற்படும் போது ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை குறைக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் விதிகளில் சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும். இந்திய அளவில் பட்டாசு கடைகளுக்கு வழங்கப்படும் உரிமத்தை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் வழங்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியதாவது: “பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்துவது, சரவெடி தயாரிப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுபடியே பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும். தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உடனடியாக ஆய்வு செய்து மீண்டும் உரிமம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இடி தாக்காமல் இருப்பதற்கு பட்டாசு ஆலைகளில் மகிழம்பூ மரங்களை வளர்க்கலாம். தீபாவளி, ஓணம் போன்ற பண்டிகைகள் சிறப்பு நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டு அதில் சுற்றுச்சூழல் விலக்கு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும். பட்டாசு கடைகளுக்கு உரிமம் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இந்த கூட்டத்தில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை கட்டுப்பாட்டு அலுவலர் ஶ்ரீ குமார், தொழில் துறை இணைச் செயலர் புவனேஷ்பிரதாப் சிங், தனி செயலர் நாராயண் சிங், டி.ஆர்.ஓ ராஜேந்திரன், டான்பாமா, டிப்மா, சிப்மா உள்ளிட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியது: “தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தல்படி சிவகாசி பட்டாசு தொழில் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரிமையாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பியூஸ் கோயலிடம் தெரிவிப்பேன். இந்த ஆலோசனை மூலம் புதிய தலைமுறை பட்டாசு உற்பத்தி, சந்தைபடுத்துதல் மற்றும் விற்பனை புதிய யுக்திகளை புகுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு அனைவரும் பாதுகாப்பான முறையில் சந்தோசமாக பட்டாசு வெடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பட்டாசு தொழில், சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை முக்கியம். தமிழக மக்கள் மற்றும் பண்பாட்டின் மீது பாசம் கொண்ட மலையாளியாக பட்டாசு தொழிலுக்காக வாதடுவேன். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விபத்தில் நிறைய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த முழுமையான தகவல் இதுவரை தெரியவில்லை. சில விஷயங்களுக்கு கால நேரம் தேவைப்படுகிறது,” என்றார்.

பின்னர், சிவகாசி அருகே கீழதிருத்தங்கல்லில் உள்ள சோனி விநாயகா பட்டாசு ஆலையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு வசதிகள் மற்றும் பட்டாசு உற்பத்தி குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் அனைத்து பட்டாசு உற்பத்தி அறைகளும் கான்கிரீட் அறைகளாக அமைக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும், என அறிவுரை வழங்கினார்.

தென்னிந்தியாவின் பட்டாசு திருவிழா: “தீபாவளி என்றாலே தமிழ்நாடு தான் ஞாபகம் வரும். 2021-ம் ஆண்டு நான் ராஜ்யசபா எம்பி ஆக இருக்கும்போது, அனைத்து எம்பிக்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது என வாதாடிய போது, திருச்சி சிவா எம்பி சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்காக பேசினார். அப்போது அவருக்கு ஆதரவு தெரிவித்த ஒரே எம்பி நான் தான். சுற்றுலாத்துறை இணை அமைச்சர் என்ற முறையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் காலச்சார திருவிழாவில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பங்குபெறும் பட்டாசு திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x