Last Updated : 13 Aug, 2024 05:39 PM

 

Published : 13 Aug 2024 05:39 PM
Last Updated : 13 Aug 2024 05:39 PM

டிஎன்பிஎஸ்சி தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம்

எஸ்.கே.பிரபாகர் | கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள அரசுப்பணிகளில் காலியாகும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் முகமையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காலியாகும் இடங்களுக்கு ஏற்ப, தேர்வுப் பட்டியலை முன்னரே வெளியிட்டு, அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை, ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் அரசின் பரிந்துரைப்படி, ஆளுநரால் நியமிக்கப் படுகின்றனர். தற்போதைய சூழலில் 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

முன்னதாக, தலைவராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடந்த 2022-ம் ஆண்டு பணி மூப்பால் ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி முதல், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக உள்ளார்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக தற்போது, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழக அரசு இன்று (ஆக.13) உத்தரவிட்டுள்ளது. இவர் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இப்பதவியில் இருப்பார் என்று தமிழக மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்த 1966-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.கே.பிரபாகர், ஐஐடி டெல்லியில் எம்டெக் முடித்தவர். கடந்த 1989-ம் ஆண்டு நேரடி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி, தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியின் போது, அவரது செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். தமிழக அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை, வணிகவரித் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளின் செயலராக பணியாற்றியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இவர் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். கடந்த 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இவரை உள்துறைச் செயலராக நியமித்தார். அதன்பின், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற இன்னும் 17 மாதங்கள் உள்ள நிலையில், தற்போது எஸ்.கே.பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x