Published : 13 Aug 2024 05:07 PM
Last Updated : 13 Aug 2024 05:07 PM
சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது திமுக பிரமுகர் ஒருவரும் விஏஓ-வும் புகார் அளித்தனர். அதன்பேரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகவும் சி.வி.சண்முகம் மீது இரண்டு வழக்குகள் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டன.இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, “சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும். திமுக நிர்வாகி புகார் அளித்தது தவறு” என சி.வி.சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.காவல் துறை தரப்பில், “அனுமதியின்றி போரட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்கு பேர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “வழக்கில் சரியான பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. போராட்டம் நடந்த காலத்தில் கரோனா விதிகள் அமலில் இல்லாதபோது, அந்த விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
எட்டு மாதங்களுக்கு பின் திமுக பிரமுகர் அளித்த புகாரில் இரண்டாவது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது. முதல் தகவல் அறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான இரு வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT