Published : 13 Aug 2024 03:46 PM
Last Updated : 13 Aug 2024 03:46 PM

மதுரை | குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.10 ஆயிரம்: உரியவரிடம் ஒப்படைத்து நெகிழவைத்த தூய்மைப் பணியாளர்கள்

மதுரை: மாநகராட்சி குப்பை தொட்டியில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்த தூய்மைப் பணியாளர்கள் மூவர், சுகாதார அதிகாரிகள் மூலம், பணத்தை பறிக்கொடுத்தவரிடம் ஒப்படைத்த சம்பவம், மதுரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள், நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில் பணிபுரிகிறார்கள். மாநகராட்சியில் வசிக்கும் 20 லட்சம் மக்கள் தொகைக்கு தகுந்தவாறும், அவர்கள் ஒவ்வொரு நாளும் வெளியேற்றும் குப்பைகளுக்கு தகுந்தவாறும் தூய்மைப் பணியாளர்கள் மதுரை மாநகராட்சியில் பணிபுரியவில்லை.

போதிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் பணிச் சுமையிலும், தூய்மைப் பணியாளர்கள் அன்றாடம் வீடுகள் தோறும் சேரும் குப்பைகளையும், மக்கள் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசும் குப்பைகளையும் சேகரித்து, அதனை தரம் பிரித்து மதுரைக்கு அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கு கொண்டு போய் பாதுகாப்பாக கொட்டுகின்றனர்.

அந்த குப்பைகளையும் உரமாக்கி, விவசாயிகளுக்கு விலையின்றி விநியோகம் செய்கின்றனர். இத்தனை அன்றாட பணிகளுக்கு மத்தியில் அவ்வப்போது தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், குப்பை சேகரிப்பு தடவாளப் பொருட்கள் போன்ற தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக போராடி வருகின்றனர். அதுவும், காலை நேரங்களில் தங்கள் பணிகளை முடித்துவிட்டுத்தான் இந்தப் போராட்டத்திற்கு செல்கிறார்கள்.

ஆனாலும் மாநகராட்சியால் தற்போது வரை தூய்மைப் பணியாளர்களின் குறைகளை முழுமையாக போக்க முடியவில்லை. அப்படியிருந்தும் மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியிலும், செயலிலும் நேர்மையாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

மதுரை மாநகராட்சியின் 12-வது வார்டில் உள்ள பாரதியார் மெயின் ரோட்டில் வசிக்கும் முகம்மது இஸ்மாயில் என்பவர், பத்தாயிரம் ரூபாயை கவனகுறைவாக வீட்டில் உள்ள குப்பையுடன் சேர்த்து அவரது வீட்டின் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. அதைக் காணாமல் காலை முதல் இஸ்மாயில், அங்கும் இங்குமாக தேடியுள்ளார். எங்கு தேடியும் பணம் கிடைக்காததால் அதிர்ச்சியும், கவலையுமாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் குப்பை சேகரிக்க வந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேகர், பெருமாள், வழிவிட்டான் ஆகியோர் அங்குள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகளை தரம் பிரித்து சேகரித்துள்ளனர். அப்போது, குப்பையுடன் ரூ.10 ஆயிரமும் இருந்துள்ளது. பணத்தைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மூவரும், அந்த குப்பையில் பணம் கிடந்த விஷயத்தை உடனடியாக தங்கள் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் மாநகர நகர் நல அலுவலர் வினோத், உதவி நகர் நல அலுவலர் அபிஷேக் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் உதவியுடன் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரித்தபோது, இஸ்மாயில் குப்பையுடன் தனது ரூ.10 ஆயிரத்தை போட்டது தெரியவந்தது. பணம் கிடைத்ததும் பெரும் மகிழ்ச்சியடைந்த இஸ்மாயில், குப்பை தொட்டியில் கிடைத்த பணத்தை எடுத்துச் செல்லாமல் நேர்மையாக தன்னிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியார்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

இது குறித்து தகவலறிந்த மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் அந்த தூய்மைப் பணியாளர்கள் மூவரையும் மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டினார். மேலும், அவர்களின் நேர்மையைப் பாராட்டு வெகுமதியும் வழங்கி கவுரவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x