Published : 13 Aug 2024 03:38 PM
Last Updated : 13 Aug 2024 03:38 PM
சென்னை: “18 சதவீத ஒதுக்கீட்டில் பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்தும், உள் ஒதுக்கீடு வழங்கிய பிறகு, அருந்ததியர் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்த அரசு வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஆக.13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “அகில இந்திய அளவில் பட்டியலின பிரிவில் தேவேந்திரகுல வேளாளர்கள், அருந்தியர்கள், ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட 76 சாதிகள் உள்ளன. தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலின பிரிவில் இருந்து விலக்கி, புது பிரிவை உருவாக்கி மக்கள் தொகைக்கு ஏற்ப அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பங்கீடு அளிக்க வேண்டும் என 100 ஆண்டுகளுக்கு மேலாக கோரி வருகிறோம்.
இதனுடைய ஒரு பகுதியாக பள்ளர், மூப்பர் உள்ளிட்ட 7 சமூகத்தினரை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என 2021-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் 76 சமூகத்தினரை உள்ளடக்கிய பட்டியல் பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 18 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசுத்துறைகளில் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும், உயர் பதவிகள் வழங்கப்படவில்லை என்றும் 1996 காலகட்டத்தில், நான் உட்பட அமைக்கப்பட்ட 10 எம்எல்ஏ-க்கள் குழு சுட்டிக்காட்டியது.
இதை கண்டுகொள்ளாத அரசு, 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கான தரவுகளும் அவர்களிடம் இல்லை. இக்கூட்டத்தில், முதலில் எம்எல்ஏ-க்கள் குழு சுட்டிக்காட்டிய 3.50 லட்சம் பணியிடங்களை நிரப்பிவிட்டு அதில் பிரதிநிதித்துவம் இல்லாத பட்சத்தில் சிறப்பு ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.
எனினும், பிற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால், அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. இதனால், சுழற்சி முறையில் இடஒதுக்கீட்டை முறையாக நிரப்பாமல், அனைத்து காலியிடங்களையும் அருந்ததியினருக்கே கொடுத்தார்கள். இதனால் கடந்த 14 ஆண்டுகளில் தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட சமூகத்தினர் உயர் பதவிக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டது. இதைவிட சமூக அநீதி எதுவுமே கிடையாது.
76 சமூகத்தினருக்கு இருக்கும் இடஒதுக்கீட்டை ஏன் ஒரு சமூகத்தினருக்கு மட்டும் கொடுத்தார்கள்? இதை முடிவு செய்வதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் பிழை செய்திருக்கிறது. ஒதுக்கீட்டை திமுக வழங்கியது என்றால், அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக என அனைவரும் ஏன் ஆதரித்தனர்? அனைத்து அரசியல் கட்சியினரும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பிற சமூகத்தினரை ஒதுக்கிவிட்டு அருந்ததியினருக்கு ஒதுக்கீடு வழங்கியுள்ளனர்.
இவ்வாறு ஆதிதிராவிடர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு உரிமை பறிக்கப்பட்டது தொடர்பாக கருத்தரங்கம், போராட்டம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்கவுள்ளோம். 18 சதவீத ஒதுக்கீட்டில் பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்தும், உள் ஒதுக்கீடு வழங்கிய பிறகு, அருந்ததியர் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்த அரசு வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்டோருக்கு எதிராக அரசியல் கட்சிகள் செயல்பட்டால் 1996, 1998 காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் அரங்கேறும்,” என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி, தலைமை நிலையச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT