Last Updated : 13 Aug, 2024 01:52 PM

 

Published : 13 Aug 2024 01:52 PM
Last Updated : 13 Aug 2024 01:52 PM

தமிழக அமைச்சரவைக் கூட்டம்: 15 புதிய முதலீடுகள், பசுமை எரிசக்தி சார்ந்த 3 புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், பசுமை எரிசக்தி சார்ந்த 3 கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக முதல்வர் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் தமிழக அமைச்சரவைக்கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு தொடங்கிய அமைச்சரவைக்கூட்டம், 11.50 மணிவரை நடைபெற்றது. அதன்பின் பகல் 12.25 மணிவரை அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் அரசு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சரவைக்கூட்டத்துக்குப்பின் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கலன் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடுகள் வந்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் சென்கார்ப்பில் ரூ.21,340 கோடி முதலீட்டில் 1114 பேருக்கு வேலை, காஞ்சிபுரத்தில் மெகர்சன் எலெக்ட்ரானிக்ஸில் ரூ.2,500 கோடியில் 2,500 பேருக்கு வேலை அளிக்கும் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக, சிப்காட் சார்பில், காஞ்சிபுரம் வல்லம்வடகால் பகுதியில் ரூ. 706.05 கோடியில் பாக்ஸ்கான் நிறுவன பணியாளர்கள் தங்குவதற்காக 18,720 பேர் தங்கும் வகையிலான கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலும், தமிழ்நாடு நீரேற்று திட்டங்கள் கொள்கை, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் கொள்கை, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை ஆகியவற்றுக்கும் இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x