Published : 13 Aug 2024 01:12 PM
Last Updated : 13 Aug 2024 01:12 PM
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி நாளை மறுநாள் (15.08.2024) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
காங்கிரஸ் புறக்கணிப்பு: இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், “சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.
ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.
அவ்வகையில் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிவிப்பில், “தற்போது ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, கடந்த 2019 ஜூன் மாதம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, மக்கள் உணர்வுக்கு எதிராகவும், ஜனநாயக முறைகளை நிராகரித்தும் அதிகார அத்துமீறவில் ஈடுபட்டு வருகிறார். இவரது அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் தொடர்ந்து தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும், சட்ட மசோதாக்களும் உரிய முறையில் ஏற்கப்படாமல் மக்களாட்சி மாண்புக்கும், மரபுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். மாநில உரிமைகளை நிலைநாட்ட சட்டப் போராட்டம் நடத்தும் நெருக்கடியை உருவாக்கி வருகிறார். அறிவுத் துறையில் திறன் மிகுந்த இளைய தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளை சிதைக்கும் முறையில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க தடை ஏற்படுத்தி வருகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசை நடத்தி வருகின்றார். ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் ஊது குழலாக செயல்படுகின்றார்.
இந்த நிலையில் ஆளுநர் வழங்கும் தேனீர் விருந்தை புறக்கணித்து, அவரது ஜனநாயக விரோத செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு: “கூட்டாட்சியை, அரசியலமைப்பை மதிக்காத ஆணவப்போக்கு கொண்ட ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் நீடித்திருப்பதே இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக புறக்கணிப்பு: “சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் வழக்கம்போல அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழைப்பு விடுத்தமைக்கு எமது நன்றி. எனினும், ஆளுநரின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை விசிக புறக்கணிக்கிறது.” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். எனினும், திமுக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...