Published : 09 May 2018 08:43 AM
Last Updated : 09 May 2018 08:43 AM

ஜிஎஸ்டியால் மூலப் பொருட்களின் விலை உயர்வு; கடும் நெருக்கடியில் மோட்டார் பம்ப்செட் நிறுவனங்கள்: 30 சதவீத உற்பத்தி இழப்பு என தொழில்துறையினர் வேதனை

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின்னர் மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சிறு, குறு மோட்டார் பம்ப்செட் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. ஓராண்டில் 30 சதவீத உற்பத்தி குறைந்துள்ளது.

1938 முதல் கோவையில் மோட்டார் பம்ப்செட்டுகள் தயாரிக்கப்பட்டன. அனைத்து விவசாயிகளும் கிணற்றுக்கு மோட்டாரை பயன்படுத்தியதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக் கத் தொடங்கியதாலும் இவற்றின் தேவை அதிகரித்தது. 1978-க்குப் பின்னர் மோட்டாரின் தேவை பெரிதும் அதிகரித்தது.

கோவையில் 0.5 ஹெச்.பி. முதல் 20 ஹெச்.பி. வரையிலான மோட்டார் பம்ப்செட்டுகள் சிறு, குறு உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. பெரு நிறுவனங்களில் 500 ஹெச்.பி. வரையிலான மோட்டார் பம்ப்செட்டுகள் உற்பத்தியாகின்றன. கோவையில் மட்டும் சுமார் 3 ஆயிரம் சிறு, குறு மோட்டார் பம்ப்செட் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலைச் சார்ந்து 15 ஆயிரம் சிறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின்னர் மோட் டார் பம்ப்செட் உற்பத்தித் தொழில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது.

நடைமுறைச் சிக்கல்கள்

இதுகுறித்து கோவை பம்ப் செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.மணிராஜ் ‘தி இந்து’விடம் கூறியது: தொடக்கத்தில் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்ட மோட்டார் பம்ப்செட்டுகளில் 65% கோவையில்தான் உற்பத்தியாகின. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உற்பத்தி குறைந்து, மோட்டார் பம்ப்செட் உற்பத்தியில் குஜராத் மாநிலம் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு அனைத்துப் பொருட்களின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துவிட்டது.

மோட்டார் பம்ப்செட் தயாரிப்புக்குத் தேவையான இரும்பு, காந்த அலைத் தகடுகள், காப்பர், காஸ்டிங், துருப்பிடிக்காத சீல் தகடுகள், ஸ்டால் ராடுகள் உள்ளிட்டவற்றின் விலை 20% உயர்ந்துவிட்டது. மேலும், வெல்டிங், பாலீஷிங், கடைதல் உள்ளிட்ட தொழில்களுக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மூலப் பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இதனால் சிறு, குறு மோட் டார் பம்ப்செட் நிறுவனம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

கொள்முதலுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரி கட்டும் நாங்கள், விற்பனையின்போது 12 சதவீதம் வரி மட்டுமே விதிக்கிறோம். ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன்னர் கொள்முதல், விற்பனை என அனைத்துக்கும் 5 சதவீத வரி மட்டுமே இருந்தது. அதிக வரியாலும், மாதந்தோறும் வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாலும் பல்வேறு சிரமங்களுக்கு தொழில்முனைவோர் உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஓராண்டுக்குள் 30 சதவீத உற்பத்தி குறைந்துவிட்டது. ஐந்து சதவீத சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. மேலும், 15 சதவீதம் பேர் தொழி லைத் தொடரலாமா, வேண்டாமா என்ற மனநிலையில் தவிக்கின்றனர்.

உழைப்பை நம்பி, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் புதிய தொழில்முனைவோருக்கு, ஜிஎஸ்டி அமலாக்கம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறு, குறுந் தொழில்களைப் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x